கொடநாடு விவகாரம்: முதல்வரை பதவி விலக அறிவுறுத்த வேண்டும்- ஆளுநரிடம் ஸ்டாலின் புகார் மனு

கொடநாடு விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை பதவி விலக அறிவுறுத்த வேண்டும் என்று
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திங்கள்கிழமை சந்தித்து கொடநாடு விவகாரம் குறித்து புகார் மனு அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திங்கள்கிழமை சந்தித்து கொடநாடு விவகாரம் குறித்து புகார் மனு அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.


கொடநாடு விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை பதவி விலக அறிவுறுத்த வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் மனு அளித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்றார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து, மு.க.ஸ்டாலின் மனு அளித்தார். இந்தச் சந்திப்பு சுமார் 20 நிமிஷங்களுக்கு மேலாக நீடித்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது:
கொடநாடு விவகாரம் தொடர்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விடியோ தொடர்பாக ஆளுநரை திமுக சார்பில் சந்தித்து மனு அளித்தோம். 
அந்த மனுவில், நேர்மையான ஐ.ஜி. தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். பாரபட்சமற்ற சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்றால், முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை விலக அறிவுறுத்த வேண்டும்.
முதல்வர் மீதே கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளோம்.
கொடநாடு பங்களா என்பது ஏதோ தனியார் இடமாக இருந்திடவில்லை. முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாகவே இயங்கி வந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அரசு தொடர்பான கோப்புகள்கூட அங்கே இருந்துள்ளன.
கொலை, கொள்ளையில் முதல்வரின் பெயரைக் குற்றவாளிகளே கூறியுள்ள நிலையில், தொடர்புடையவர்களை அழைத்து விசாரணை நடத்தாமல், யார் குற்றம் சுமத்தியிருக்கிறார்களோ அவர்களை சென்னையிலிருந்து போலீஸ் தனிப்படை சென்று 2 பேரை கைது செய்துள்ளது.
கனகராஜ் மரணம் ஒரு விபத்துதான் என்று இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்து கூறிய எஸ்.பி., முரளி ரம்யாவை அழுத்தம் கொடுத்து, முதல்வர் இது தொடர்பாக பேட்டி அளிக்க வைத்துள்ளார்.
அதனால், இந்தக் கொலை வழக்கில் எஞ்சியிருக்கக் கூடிய தடயங்களை அழிக்கும் முயற்சியில் முதல்வர் ஈடுபட்டு வருகிறார். அதற்காக காவல்துறையைப் பயன்படுத்தி வருகிறார்.
முதல்வராக எடப்பாடி பழனிசாமி நீடிக்கக்கூடாது. அவர் உடனடியாக பதவி விலகி பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும்.
நாங்கள் கூறியதையெல்லாம் ஆளுநர் கூர்ந்து கேட்டார். என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை நிச்சயம் எடுப்பேன் என்ற உறுதியையும் அவர் தந்துள்ளார்.
ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால், தேவைப்பட்டால் குடியரசுத் தலைவரை திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து முறையிடுவர். தேவைப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் திமுக தயாராக உள்ளது.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காகத் தான் பாஜக இந்த விவகாரத்தின் மூலம் அதிமுகவை மிரட்டுகிறதா எனக் கேட்கிறீர்கள். உங்கள் யூகங்களுக்குப் பதில் அளிக்க முடியாது. இது கொலை வழக்கு. இதில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றார். 
முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் கனிமொழி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com