ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

ஹெச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் கர்ப்பிணிக்கு இன்று (வியாழக்கிழமை) மதுரை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. 
ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது


ஹெச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் கர்ப்பிணிக்கு இன்று (வியாழக்கிழமை) மதுரை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. 

விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு, ஹெச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் கடந்த மாதம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவா்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். அவருக்கு ஜன. 30-ஆம் தேதி குழந்தை பிறக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் இன்று மாலையில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, சற்றுநேரத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் மருத்துவர் குழுவின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"ஹெச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண், கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு சுகப்பிரசவத்தின் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை 1 கிலோ 700 கிராம் எடையுள்ளது. மற்ற குழந்தைகளை ஒப்பிடும்போது சற்று குறைவான எடையுடன் இந்த குழந்தை பிறந்திருந்தாலும், பூரண ஆரோக்கியத்துடன் உள்ளது. 

தற்போது இந்த குழந்தையை தனி வார்டில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்துள்ளோம். 

இக்குழந்தையை தொடர்ந்து கண்காணிக்கவும், உரிய சிகிச்சை அளிக்கவும் 10 மருத்துவர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பிறந்து சிறிது நேரத்திலேயே அக்குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. தடுப்பு மற்றும் மஞ்சள்காமாலை நோய்க்கான தடுப்பு ஊசிகள் போடப்பட்டுவிட்டன. 

இந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அதன் மூலம் ஹெச்.ஐ.வி. தொற்று பரவும் என்பதால், பால் பவுடர் போன்ற உணவுகள் கொடுக்கப்படும்.

 45 நாள்கள் தீவிர கண்காணிப்புக்குப் பிறகுதான் அக்குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உள்ளதா என்பதை உறுதிப்படுத்த இயலும். குழந்தையின் எடையை அதிகரிக்க உரிய சிகிச்சைகள் அளிக்கப்படும். தாயும், சேயும் நல்ல நிலையில் உள்ளனர்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com