2-வது உலக முதலீட்டாளர் மாநாடு ஜன. 23-இல் தொடக்கம்: ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்க்க திட்டம்

தமிழக அரசின் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 23-இல் சென்னையில் தொடங்குகிறது. இந்த மாநாட்டின் வழியாக ரூ.50 ஆயிரம் கோடிக்கும்
2-வது உலக முதலீட்டாளர் மாநாடு ஜன. 23-இல் தொடக்கம்: ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்க்க திட்டம்


தமிழக அரசின் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 23-இல் சென்னையில் தொடங்குகிறது. இந்த மாநாட்டின் வழியாக ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக தொழில் முதலீடுகளை ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார். மேலும், இந்த மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டில், தமிழக அரசின் வானூர்தி மற்றும் பாதுகாப்புத் துறைக்கான தனி கொள்கை வெளியிடப்பட உள்ளது.
அடுத்தடுத்த கூட்டங்கள்: கடந்த 2015-இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இரண்டு நாள்கள் நடந்த இந்த மாநாட்டில் 6 ஆயிரத்து 500 நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றதுடன், 1,600 வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், தமிழக அரசின் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 23-ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் இந்த மாநாட்டை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார். 
இந்த மாநாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு முன்பாக, பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது தொழில்களைத் தொடங்கவும், விரிவுபடுத்தவும் தேவையான நிலங்களை ஒதுக்கீடு செய்ய தமிழக அமைச்சரவை இரண்டு முறைக்கு மேல் கூடி ஒப்புதல்கள் வழங்கியுள்ளது.
ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிகம்: இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் வழியாக ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இரண்டு நாள் கருத்தரங்கு: இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 23-இல் தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது. வரும் 23-ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. மாநாட்டினை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தொடங்கி வைக்க உள்ளனர்.
இதன்பின், தொழில் துறை சந்திக்கும் சவால்கள், தமிழகத்தின் சூழலியல் அமைப்பு, வானூர்தி மற்றும் பாதுகாப்பு உபகரண தயாரிப்புக்கு தமிழகம் ஏன் விரும்பக்கூடிய மாநிலமாக உள்ளது என்பன போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்தரங்கள் நடைபெறவுள்ளன. வரும் 24-ஆம் தேதியும் உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை மாநாடு நிறைவு பெறுகிறது. இதில், துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com