புதுவை ஆளுநர் மாளிகை பாஜக தலைமை அலுவலகம் போல செயல்படுகிறது: காங்கிரஸ் செயலர் சஞ்சய் தத் குற்றச்சாட்டு

புதுவை ஆளுநர் மாளிகை பாஜக தலைமை அலுவலகம் போலச் செயல்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் செயலரும், புதுவை காங்கிரஸ் பொறுப்பாளருமான சஞ்சய் தத் குற்றஞ்சாட்டினார்.
சக்தி செயலி திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட பி.கே.தேவதாஸுக்கு அதற்கான  சான்றிதழை வழங்கிய அகில இந்திய காங்கிரஸ் செயலர் சஞ்சய் தத்
சக்தி செயலி திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட பி.கே.தேவதாஸுக்கு அதற்கான  சான்றிதழை வழங்கிய அகில இந்திய காங்கிரஸ் செயலர் சஞ்சய் தத்


புதுவை ஆளுநர் மாளிகை பாஜக தலைமை அலுவலகம் போலச் செயல்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் செயலரும், புதுவை காங்கிரஸ் பொறுப்பாளருமான சஞ்சய் தத் குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கெனவே சக்தி என்ற பெயரில் செல்லிடப்பேசி செயலி செயல்படுகிறது. இதன் மூலம், நாடு முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்
புதுவையில் இந்தத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 20) தொடங்கப்பட உள்ளது. இந்தச் செயலியின் மூலம் புதுவையில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருங்கிணைக்கப்படுவர்.
வட மாநிலத் தேர்தல்களில் இந்தச் செயலியின் மூலம் தொண்டர்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. அந்தக் கருத்துகளின் மூலமே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முக்கிய முடிவுகளை எடுத்தார். இந்தச் செயலியில் காங்கிரஸ் தலைவரின் உரை, முக்கியத் திட்டங்கள், செயல்பாடு தொடர்பான விவரங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும்.
மக்களவைத் தேர்தலையொட்டி, புதுவையில் வாக்குச்சாவடி  அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு, வாக்காளர்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து, மத்திய அரசின் தவறான செயல்பாடுகளை விளக்கி எடுத்துரைத்துள்ளோம்.
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தொடர்ந்து, அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயல்பட்டு வருகிறார். ஆளுநர் மாளிகை பாஜகவின் தலைமையகமாகச் செயல்படுகிறது. பொங்கல் பரிசுகள் மக்களுக்கு கிடைக்காமல் தடுத்துள்ளார். காங்கிரஸ் அரசுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரது நோக்கம்.
ஊழலைத் திட்டமிட்டு உருவாக்குவதே பாஜகதான். கர்நாடகத்தில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க நினைத்தனர். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. கர்நாடகத்தைப் போல, புதுவையிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக பலமுறை முயன்று தோல்வியடைந்தது.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு இடையூறு அளிப்பதையே நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது.
புதுவை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது பற்றி அனைவரின் கருத்துகளும் கேட்கப்படும். அதனடிப்படையில், வேட்பாளர் யார் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றார் சஞ்சய் தத்.
முன்னதாக, புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் முன்னிலையில் சக்தி திட்டத்துக்கான புதுவை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட தேவதாஸுக்கு ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com