டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

தமிழக டிஜிபியாக டி.கே. ராஜேந்திரன் செயல்பட இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை


தமிழக டிஜிபியாக டி.கே. ராஜேந்திரன் செயல்பட இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை மறுத்தது.
மதுரையைச் சேர்ந்த கதிரேசன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களைத் திட்டமிட்டு மறைத்துவிட்டு டி.கே. ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார். ஆவணங்கள் அனைத்தும் 2017 ஆம் ஆண்டு நவம்பரில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில், சசிகலாவின் அறையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளன. 
எனவே, டிஜிபி டி.கே. ராஜேந்திரனின் பணி நீட்டிப்பை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐயின் சிறப்பு புலனாய்வுப் பிரிவை அமைத்து, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும், சட்ட விதிக்கு உள்பட்டு புதிய டிஜிபியை நியமிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில், காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஆவணங்கள் அனைத்தும், எந்த பொறுப்பிலும், பதவியிலும் இல்லாத சசிகலாவின் அறையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வருமானவரி புலனாய்வுத் துறை இயக்குநரே அறிக்கை தாக்கல் செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், எதிர்மனுதாரர்கள் பலருக்கும் நோட்டீஸ் சென்றடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதால், மீண்டும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நோட்டீஸ் அனைவருக்கும் சென்றடைந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், மத்திய, மாநில அரசுகள் தரப்பில் எவ்வித பதில் மனுக்களும் தாக்கல் செய்யப்படவில்லை. 
இந்நிலையில், மனுதாரர் தரப்பில் டி.கே. ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரரின் இடைக்கால கோரிக்கையை நிராகரிப்பதாக உத்தரவிட்டும், இந்த வழக்கில் தமிழக தலைமைச் செயலர், தமிழக காவல் துறைத் தலைவர் டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டும், வழக்கை வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், அன்று உரிய உத்தரவு பிறப்பிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com