தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு அளிக்கவில்லை: தம்பிதுரை

தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டிய நிதியை மத்திய அரசு அளிக்கவில்லை என மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு அளிக்கவில்லை: தம்பிதுரை


தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டிய நிதியை மத்திய அரசு அளிக்கவில்லை என மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தது: ஜெயலலிதா வழியில் நாங்களும் மத்திய அரசுடன் நல்லுறவு கொண்டுள்ளோம். அரசுகள் நல்லுறவுடன் இருப்பது வேறு, அரசியலில் வித்தியாசமாக இருப்பது வேறு. 
மக்களிடம் இரட்டை இலைக்கும், இந்த ஆட்சிக்கும் நல்ல ஆதரவு இருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கனவுகளை பா.ஜ.க. அரசு நிறைவேற்றி வருகிறது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தாலும், ஜெயலலிதா கனவு கண்டவாறு காவிரி பிரச்னை தீர்க்கப்படவில்லை. அண்மையில் மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது. அதேபோல், ஜி.எஸ்.டி.வரி வேண்டாம் என ஜெயலலிதா தெரிவித்தார். அதை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. 
மத்திய அரசு எல்லா அதிகாரத்தையும் எடுத்துக் கொண்டுள்ளது. மாநில அரசில் போதிய பணம் இல்லாத நிலையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசிலிருந்து பல்வேறு துறைகளுக்கு வரவேண்டிய ரூ.15 ஆயிரம் கோடி நிதியைப் பெற, ஜெயலலிதா பலமுறை பிரதமரைச் சந்தித்து நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியுள்ளார். சமீபத்தில் தமிழக முதல்வரும், பிரதமரைச் சந்திக்கும்போது நிலுவையில் உள்ள ரூ.9,500 கோடியையும், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.15 ஆயிரம் கோடியை வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால், அவர் கேட்ட அளவுக்கு பணம் தரவில்லை. ஜி.எஸ்.டி.-க்கு வழங்க வேண்டிய தொகை ரூ.5 ஆயிரம் கோடியை தமிழக அரசுக்கு மத்திய அரசு இன்னமும் வழங்கவில்லை. 
நான் தமிழக அரசின் உரிமைக்காகத்தான் குரல் கொடுக்கிறேன். மற்ற கட்சிகளை கொச்சைப்படுத்தும் நோக்கில் பேசவில்லை. இன்னும் கூட்டணியானது முடிவாகவில்லை. 
மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாகத்தான் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் நீக்கம் செய்யப்பட்டார்கள். மற்ற கட்சியினர் தங்கள் உரிமைக்காகப் போராடியபோது, அவர்கள் நீக்கப்படவில்லை. 
எங்களது உரிமைக்காக குரல் கொடுக்கிறோம். அதைத் தவறாக புரிந்துக் கொண்டு, நான் மத்திய அரசை எதிர்ப்பதாகக் கூறுகிறார்கள். தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை அளித்தால்தான் மத்திய அரசு உண்மையாக நட்புடன் இருப்பதாகக் கருத முடியும். அத்தகைய நட்பு இருப்பதாக நான் கருதவில்லை என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com