உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒத்திவைப்பு: பட்டாசுத் தொழிலாளர்கள் ஏமாற்றம்

உச்சநீதிமன்றத்தில் பட்டாசு தொடர்பான வழக்கு வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதால், ஆலை உரிமையாளர்கள், பட்டாசுத் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒத்திவைப்பு: பட்டாசுத் தொழிலாளர்கள் ஏமாற்றம்


உச்சநீதிமன்றத்தில் பட்டாசு தொடர்பான வழக்கு வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதால், ஆலை உரிமையாளர்கள், பட்டாசுத் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் 2 மணி நேரமே பட்டாசு வெடிக்க வேண்டும். பேரியம் நைட்ரேட் வேதியல் பொருளைக் கொண்டு பட்டாசு தயாரிக்கக் கூடாது. பசுமை பட்டாசுகளையே தயாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவால் பட்டாசு விற்பனை சுமார் 40 சதவீதம் சரிந்தது. குழந்தைகள் விரும்பும் பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும், பேரியம் நைட்ரேட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்ததால், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1070 பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் பட்டாசுத் தொழிலாளர்கள் மற்றும் அதனைச் சார்ந்த தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கு வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டுவிடும் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தொழிலாளர்களும், ஆலை உரிமையாளர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட பட்டாசு - தீப்பெட்டித் தொழிலாளர்கள் (சி.ஐ.டி.யு.) சங்கத்தின் மாவட்டச் செயலர் பி.என். தேவா கூறியதாவது: 
பசுமை பட்டாசு குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் 2019 ஜூலை மாதத்தில் தான் பசுமைப் பட்டாசு குறித்து அறிக்கை வழங்க இயலும் என கூறிவிட்டது.
அதனால் பசுமைப் பட்டாசு குறித்து அறிக்கை வரும் வரை ஏற்கெனவே உள்ள முறைப்படி பட்டாசு தயாரிக்கலாம் என வாதாடி , ஆலையைத் திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பசுமை பட்டாசு குறித்து விளக்க வேண்டும் என மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் செவ்வாய்க்கிழமை எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை என தெரிய வந்துள்ளது. எனவே எங்கள் அமைப்பு சார்பில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையை கண்டிக்கிறோம். பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளதாதது வருந்தத்தக்கது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com