தமிழகத்தில் நான் செல்லாத கிராமங்களே இல்லை: அதிமுகவுக்கு மு.க.ஸ்டாலின் பதில்

தமிழகத்தில் நான் செல்லாத கிராமங்களே இல்லை என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கரூர் மாவட்டம், ஈசநத்தம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 
கரூர் மாவட்டம், ஈசநத்தம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 

தமிழகத்தில் நான் செல்லாத கிராமங்களே இல்லை என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கரூர் மாவட்ட திமுக சார்பில், அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட ஈசநத்தம், சின்னதாராபுரம் ஊராட்சிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
தமிழகத்தில் 12,617 ஊராட்சிகளிலும் இதுபோன்ற கூட்டங்களை நடத்தி, மக்களிடம் செல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம் என்ற அடிப்படையில்தான் இப்பணிகளைத் தொடங்கியுள்ளோம். நீங்கள் பேசுவதை நாங்கள் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் இக்கூட்டம் நடைபெறுகிறது. பிப்.17-க்குள் மாநிலம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தி முடிக்கப்படும்.
உங்களைத் தேடி நாங்கள் வந்தால் ஆளுங்கட்சியினர் எங்களைப் பார்த்து அதிர்ந்து, அச்சத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். உள்ளாட்சித் துறை அமைச்சராக ஸ்டாலின் இருந்த போது கிராமங்களுக்குச் சென்றிருக்கிறாரா என ஆளுங்கட்சியினர் கேட்கிறார்கள். இதற்கு பலமுறை விளக்கமளித்திருக்கிறேன்.
நான் திமுகவில் இளைஞரணி அமைப்பை உருவாக்கி, கிராமத்திலிருந்துதான் எனது அரசியல் பயணத்தைத் தொடங்கினேன். தமிழகத்தில் நான் செல்லாத கிராமங்களே இல்லை. நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டை நடத்தி பிரச்னைகளைக் கேட்டறிந்தவன். 
தமிழகத்தில் தற்போது நடைபெறும் அதிமுக ஆட்சி மக்களைப் பற்றியோ, அவர்களின் தேவையைப் பற்றியோ சிந்திக்காத ஆட்சிதான். எனவே இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த ஊராட்சி சபைக் கூட்டம் பயன்படப் போகிறது.
இந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து கூறினீர்கள். உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் இதுபோன்ற பிரச்னை வந்திருக்காது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததற்கு திமுகதான் காரணம் என அதிமுக அரசு பொய் சொல்லி வருகிறது. 
நாங்கள் முறையாக பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் போன்றோருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறித்தான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். நீதிமன்றம் கூறியும் இதுவரை தேர்தலை நடத்தவில்லை.
மக்களை ஏமாற்றி வரிப்பணத்தை கொள்ளையடிப்பதற்காகவே, இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப் போவதாக கபட நாடகம் நடத்துகிறார்கள் என்றார் ஸ்டாலின். 
முன்னதாக, கூட்டங்களுக்கு மாவட்டச் செயலர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, சுப்புலட்சுமி ஜகதீசன், வி.செந்தில்பாலாஜி, ம.சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டங்களில் முன்னாள் எம்பி.கே. சி.பழனிசாமி உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
போராட்டக் குழுவினருக்கு வாழ்த்து: முன்னதாக ஊராட்சி சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் அரவக்குறிச்சி வழியாக சென்ற போது, அங்கு ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இதையடுத்து அங்கு சென்ற ஸ்டாலின், உங்கள் போராட்டத்துக்கு திமுக துணை நிற்கும் என்று கூறி புறப்பட்டுச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com