குப்பையில் உடல் பாகம்: விரல் ரேகை மூலம் ஆதார் விவரத்தைத் தேடும் பணி தோல்வியடைந்தது ஏன்?

சென்னை பெருங்குடியில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் ஒரு கையின் விரல் ரேகை மூலம் ஆதார் விவரத்தைத் தேடும் பணி தோல்வியடைந்துள்ளது.
குப்பையில் உடல் பாகம்: விரல் ரேகை மூலம் ஆதார் விவரத்தைத் தேடும் பணி தோல்வியடைந்தது ஏன்?


சென்னை: சென்னை பெருங்குடியில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் ஒரு கையின் விரல் ரேகை மூலம் ஆதார் விவரத்தைத் தேடும் பணி தோல்வியடைந்துள்ளது.

குப்பைக் கிடங்கில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கைக்குச் சொந்தமான பெண் இறந்து பல மணி நேரம் ஆகிவிட்டதால், அந்த கையில் இருந்து கைரேகை பெற முடியாமல் போனதால், ஆதார் விவரங்களை சேகரிக்க முடியாமல் காவல்துறையினர் தோல்வி அடைந்துள்ளனர்.

இதையடுத்து, வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகளுக்கு அருகே இருக்கும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருக்கும் பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை பெருங்குடியில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் சாக்கு மூட்டையில் நேற்று பெண்ணின் ஒரு கை மற்றும் இரண்டு கால் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை அருகே பெருங்குடியில் மாநகராட்சியின் குப்பைக் கிடங்கு உள்ளது. சென்னை முழுவதும் சேகரிக்கப்படும் குப்பை லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு இங்கு கொட்டப்படுகிறது. 

இந்நிலையில் இங்கு திங்கள்கிழமை மாலை சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது. அதை குப்பைக் கிடங்கு ஊழியர்கள் திறந்து பார்த்தனர். அப்போது அதில் ஒரு பெண்ணின் உடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட இரு கால்கள், வலது கை ஆகியவை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், பள்ளிக்கரணை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த உடல் பாகங்களை ஆய்வு செய்தனர். கைப் பகுதியில் சிவன், பார்வதி படமும், ஒரு டிராகன் படமும் பச்சை குத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் போலீஸார், அந்த உடல் பாகங்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீஸார், வழக்குப் பதிவு செய்தனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார், அந்த பெண்ணின் உடல் எங்கு வீசப்பட்டது, அவரை கொலை செய்தது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் அங்கு கொட்டப்பட்ட குப்பை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் போலீஸார், கோடம்பாக்கம் பகுதியில் பெண்கள் காணாமல் போயுள்ளனரா என விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com