31.60 லட்சம் பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு: இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்

பிரதம மந்திரி உஜாலா திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் வறுமைக்கோட்டுக்கு கீழே வசிக்கும் 31.60 லட்சம் பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று இந்தியன் ஆயில் நிறுவனத்தின்


பிரதம மந்திரி உஜாலா திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் வறுமைக்கோட்டுக்கு கீழே வசிக்கும் 31.60 லட்சம் பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி செயல் இயக்குநர் பி.ஜெயதேவன் தெரிவித்தார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து  பி.ஜெயதேவன் கூறியது: தமிழகம் முழுவதும் 2.38 கோடி வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர். இதில், இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மட்டும் 1.36 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேலும், 851 விநியோகஸ்தர்களும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, எண்ணூர் திரவ இயற்கை எரிவாயு முனையத்தைத் தொடங்கி வைத்தார். நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள முதல் திரவ இயற்கை எரிவாயு முனையம் ஆகும். குறைந்த செலவில், சுத்தமான எரிவாயுவை வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் ஆட்டோ எரிவாயு நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்ல இந்த முனையம் உதவுகிறது.
எண்ணூர்-தூத்துக்குடி: எண்ணூரில் இருந்து தூத்துக்குடி வரை 1,250 கி.மீ. தூரத்துக்கு எரிவாயு குழாய் அமைக்கும்  பணிகள் மேற்கொள்ளபடவுள்ளன. இதுதவிர, எண்ணூர்-பெங்களூரு மற்றும் எண்ணூர்-மணலி இடையே எரிவாயு குழாய்கள் அமைக்கப்படவுள்ளன. மணலி, ஸ்ரீபெரும்புதூர், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய முக்கிய தொழிலக மையங்களை இணைக்கும் வகையில் சென்னை, திருச்சி, மதுரை வழியாக எரிவாயு குழாய் அமைக்கப்படும். இதுதவிர, மாநகர எரிவாயு விநியோகத் திட்டத்தின் கீழ்,  ரூ.4,200 கோடியில் சேலம், கோயம்புத்தூர் பகுதிகளில் 12.5 லட்சம் குழாய் வழியாக இயற்கை எரிவாயு இணைப்பும், 430 எரிவாயு விநியோக நிலையங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 நடப்பாண்டில் எரிவாயு நிரப்பும் மையங்களில் கூடுதலாக எரிவாயுவைச் சேமித்து வைப்பதற்கான வசதிகள் செய்யப்பட உள்ளன. இதன்படி, செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் மதுரையில் உள்ளிட்ட எரிவாயு நிரப்பும் மையங்களில் 6 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு கூடுதலாக எரிவாயு சேமித்து வைக்கப்பட உள்ளது.
இலவச எரிவாயு  இணைப்பு: பிரதம மந்திரி உஜாலா திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் 31.60 லட்சம் பேருக்கு இலவச எரிவாயு இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் மட்டும் 16.20 லட்சம் பேருக்கும், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் 7.08 லட்சம் பேருக்கும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் 8.2 லட்சம் பேருக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  
மேலும், இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 5 கிலோ எடையுள்ள சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. ஏற்கெனவே, இத்திட்டத்தின் கீழ் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களை பெறுபவர்கள் கூட இந்த எடை குறைந்த சிலிண்டர்களை மாற்றிக் கொள்ளலாம்.
ஆயுள் தண்டனை பெற்ற சிறைக் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், அவர்களை கொண்டு நடத்தப்படும் பெட்ரோல் பங்க்குகள்  புழல், வேலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 இடங்களில் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ளன. மேலும், திருச்சி,கோயம்புத்தூர்,  மதுரை உள்பட 6 இடங்களில் விரைவில் திறக்கப்பட உள்ளன என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியின்போது, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பொதுமேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) ஆர்.சிதம்பரம் உள்ளிட்ட அதிகாரிகள்  உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com