ராயப்பேட்டை அரசு மருத்துவமனை: டயாலிசிஸ் சிகிச்சையை அதிகரிக்க புதிதாக 30 சாதனங்கள்

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக  ரூ.2 கோடி செலவில் 30 டயாலிசிஸ் சாதனங்கள் புதிதாக கொள்முதல்
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை: டயாலிசிஸ் சிகிச்சையை அதிகரிக்க புதிதாக 30 சாதனங்கள்

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக  ரூ.2 கோடி செலவில் 30 டயாலிசிஸ் சாதனங்கள் புதிதாக கொள்முதல் செய்யப்படவுள்ளன. இன்னும் ஒரு மாதத்துக்குள் அவை நிறுவப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளன.
அதன் பின்னர், மாதந்தோறும் 2,700-இலிருந்து 3,000 டயாலிசிஸ் சிகிச்சைகள் கூடுதலாக மேற்கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிறுநீரகப் பிரச்னைக்காக மாதந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். அவர்களில் டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அந்த வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. சிலருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது மொத்தம் 4 டயாலிசிஸ் சாதனங்கள் அங்கு உள்ளன. அதன் வாயிலாக மாதந்தோறும் 300-க்கும் மேற்பட்ட  டயாலிசிஸ் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், புதிதாக மேலும் 30 டயாலிசிஸ் சாதனங்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு சாதனம் ரூ.7.5 லட்சம் வீதம் அவை வாங்கப்பட உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
மேலும், டயாலிசிஸ் சிகிச்சைக்குத் தேவையான எதிர் சவ்வூடு பரவல் (ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்) கட்டமைப்பு ரூ.10 லட்சம் செலவில் மருத்துவமனை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டயாலிசிஸ் சாதனங்கள் கொள்முதல் மற்றும் எதிர் சவ்வூடு கட்டமைப்புக்குத் தேவையான நிதியை தேசிய சுகாதார இயக்கம் (என்ஹெச்எம்) வழங்கியுள்ளது. இதற்கு நடுவே புதிய சாதனங்களை நிறுவுவதற்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வசந்தாமணி கூறியதாவது:
சிறுநீரக சிகிச்சைகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.பொதுவாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் நோயாளியின் ரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை மட்டுமே தானமாகப் பெற்று பொருத்த முடியும். ஆனால்,  மற்ற எந்த அரசு மருத்துவமனைகளிலும் இல்லாத வகையில் மாற்று ரத்தப் பிரிவு சிறுநீரகங்களையும் பொருத்தும் சவாலான அறுவை சிகிச்சைகள் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோன்று ராயப்பேட்டை மருத்துவமனையிலும் பல்வேறு சிக்கலான சிறுநீரக சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனை மேலும் மேம்படுத்தும் நோக்கிலேயே ராயப்பேட்டை மருத்துவமனைக்கு  30 புதிய டயாலிசிஸ் சாதனங்கள் வாங்கப்பட உள்ளன.
அதன் மூலம் கூடுதலாக நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சைகள் அளிக்க முடியும். மேலும், சிறுநீரக ரத்த சுத்தகரிப்பு சிகிச்சைக்கு பல நாள்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது என்றார் அவர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 டயாலிசிஸ் சாதனங்கள் புதிதாக நிறுவப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com