நதிகள் இணைப்புக்கு போதுமான நிதி ஒதுக்குங்கள்: நிதிநிலை அறிக்கையை வரவேற்று முதல்வர் பழனிசாமி கோரிக்கை

நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு போதுமான நிதியை ஒதுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
நதிகள் இணைப்புக்கு போதுமான நிதி ஒதுக்குங்கள்: நிதிநிலை அறிக்கையை வரவேற்று முதல்வர் பழனிசாமி கோரிக்கை


நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு போதுமான நிதியை ஒதுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு வரவேற்புத் தெரிவித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை ஊக்குவிக்கவும், புறநகர் பகுதிகளில் ரயில் பயண வசதியை மேம்படுத்தவும் உரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இதன்கீழ், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளுக்கான ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும். கோவை, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். சென்னை புறநகர் ரயில் சேவைகளை மேலும் மேம்படுத்த வேண்டும். குறைந்த நிலத்தடி நீருள்ள வட்டாரங்களைக் கண்டறிந்து நீர் சக்தி இயக்கத்தின் கீழ் அவற்றை மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் பெரும் பயனைத் தரும். இவற்றை மாநில அரசின் திட்டங்களோடு ஒன்றிணைத்து செயல்படுத்த வேண்டும். இந்த நிதிநிலை கூட்டத் தொடரிலேயே கோதாவரி-காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்துக்குப் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும்.
மாநில அரசை ஆலோசியுங்கள்: பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்த அவற்றின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய நிறுவனங்கள் பல்வேறு மாநிலங்களில் சமூகப் பொருளாதாரத்தில் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை ஆலோசித்த பிறகு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
 மத்திய அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் வேளாண் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கணிசமான அளவில் நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும். அனைத்துத் துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெறுவதற்கு உகந்த தொலைநோக்குப் பார்வை கொண்டதாக நிதிநிலை அறிக்கை இருக்கிறது என தனது அறிக்கையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் பல புதுமையான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுத் துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் மலிவு விலையில் வீட்டுவசதி வழங்கும் அறிவிப்பின்படி, தமிழகத்தில்  ரயில்வே மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு நிலங்களை அந்தத் திட்டத்துக்காக வழங்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com