புதுவை ஆளுநர் தலைமையில் திட்டக் குழுக் கூட்டம்: முதல்வர், அமைச்சர்கள் வெளிநடப்பால் பாதியில் ரத்து

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில திட்டக் குழுக் கூட்டத்தில் இருந்து முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் வெளிநடப்பு செய்ததால் கூட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில திட்டக் குழுக் கூட்டத்தில் இருந்து முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் வெளிநடப்பு செய்ததால் கூட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
 புதுவை மாநிலத்தில் 2019 - 20 -ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தயாரிப்பது தொடர்பாகவும், அதில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆலோசிப்பதற்காக மாநில திட்டக் குழுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு திட்டக் குழுவின் தலைவரான துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தலைமை வகித்தார்.
 கூட்டத்தில் முதல்வர் வே.நாராயணசாமி, அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் கோகுலகிருஷ்ணன், சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களை திட்டக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பது வழக்கமான நடைமுறை. ஆனால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
 இதைக் கண்டித்து நான் வெளிநடப்பு செய்கிறேன்' என்றார். முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர், சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களின் கேள்விகளுக்குத்தான் முதல்வர், அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டும். எனவே, அவர்களையும் மாநில திட்டக் குழுக் கூட்டத்துக்கு அழைக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், துணைநிலை ஆளுநர் கிரண் பேடியோ முதல்வர், அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர் ஆகியோரின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், தொடர்ந்து கூட்டத்தை நடத்துவதிலேயே முனைப்புக் காட்டினார். இதனால், வேறு வழியின்றி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், மக்களவைத் தொகுதி உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
 ரங்கசாமி புறக்கணிப்பு: மாநில திட்டக் குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் உறுப்பினர் என்ற முறையில், கூட்டத்தில் பங்கேற்க ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார். இதேபோல, வளர்ச்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளின் செயலர்களும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால், அதிகாரிகளிடம் ஆளுநர் கிரண் பேடி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். முதல்வர், அமைச்சர்களின் வெளிநடப்பால் கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
 இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி கூறியதாவது: மாநில திட்டக் குழுக் கூட்டத்துக்கு துணைநிலை ஆளுநர் தலைவர். முதல்வர் துணைத் தலைவர். அமைச்சர்கள், எம்.பி.க்கள் உறுப்பினர்கள். புதுவை சட்டப்பேரவையில் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், நிதி செலவினம் குறித்தும் கட்சித் தலைவர்கள்தான் கேள்விகளை எழுப்புகின்றனர். இதனால், சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் மாநில திட்டக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நானும், அமைச்சர்களும் கருதினோம். அதன்படி, சட்டப்பேரவைக் கட்சி தலைவர்கள், மாஹே பிராந்திய சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோரை அழைக்க வேண்டும் என்று ஆளுநருக்கு கோப்பு அனுப்பினேன். ஆனால், அவர்களை ஆளுநர் அழைக்கவில்லை. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, கோகுலகிருஷ்ணன் எம்.பி. வெளிநடப்பு செய்தார். அமைச்சர்கள், வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் தலைவர்களை அழைத்துக் கருத்து கேட்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால், ஆளுநர் கிரண் பேடி அதை ஏற்காமல் தொடர்ந்து கூட்டத்தை நடத்தினார். இதனால், வேறு வழியின்றி ஆளுநரைக் கண்டித்து, கூட்டத்தில் இருந்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றார் அவர்.
 ஜூலை 13-இல் மீண்டும் கூட்டம்: ஆளுநர் கிரண் பேடி
 இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, "சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களையும், மாஹே பிராந்திய சட்டப்பேரவை உறுப்பினரையும் மாநில திட்டக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று முதல்வர் அனுப்பிய கோப்பு எனக்கு வந்தது. நான் அந்தக் கோப்பை தலைமைச் செயலர் மற்றும் திட்டக் குழுச் செயலருக்கு அனுப்பிவிட்டேன். ஆனால், அவர்கள் அதைப் பார்க்கவில்லை. எனவே, மாநில திட்டக் குழுக் கூட்டம் மீண்டும் வருகிற 13-ஆம் தேதி நடைபெறும். அப்போது, விதிகளுக்கு உள்பட்டு யார் யார் அழைக்கப்பட வேண்டுமோ அவர்கள் அழைக்கப்படுவர். எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நிதிநிலை அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம் பெறுகின்றன என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்' என்றார் அவர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com