வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை: என்ன காரணம் சொல்கிறார் தெரியுமா டிடிவி? 

ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ள டிடிவி, அதற்கான காரணத்தை விளக்கி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை: என்ன காரணம் சொல்கிறார் தெரியுமா டிடிவி? 

சென்னை: ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ள டிடிவி, அதற்கான காரணத்தை விளக்கி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என் அறிவித்துள்ள அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதற்கான காரணத்தை விளக்கி கட்சித் தொண்டர்களுக்கு  எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

புரட்சித் தலைவி அம்மாவின் மரணத்திற்குப் பிறகு, கழகத்தைக் காட்டிக்கொடுத்து, டெல்லிக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கத் துணிந்த துரோகிகளிடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கும் பயணத்தில் நாம் சந்தித்த சவால்கள், தடைகள், துரோகங்கள் எத்தனை எத்தனையோ. அந்த சதிகளுக்கு மத்தியில்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி என்ற சரித்திர சாதனையைப் படைத்தோம்.

இந்த வெற்றியால் எரிச்சலுற்ற நம் எதிரிகள் நம்மை வீழ்த்துவதற்கான சதி வேலைகளை இருமடங்காகச் செய்ய ஆரம்பித்த நேரத்தில்தான் நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்ற இடைத் தேர்தல்களும் வந்தது. நீதிமன்ற அனுமதியோடு தனி இயக்கம் கண்டு நாம் இயங்கிவந்தபோதும், நமக்கென ஒரு தனி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்ததை எதிர்த்து மிக நீண்ட சட்டப் போராட்டத்தை நாம் நடத்தினோம்.

கடைசியில், சுயேச்சைகளாகத்தான் போட்டியிட வேண்டும் என்று சொல்லப்பட்டு, அதன்பிறகும் சில நாள் காத்திருப்புக்குப் பிறகு பரிசுப் பெட்டகம் சின்னத்தைப் பெற்றோம். உங்களது அயராத உழைப்பின் காரணமாக இரண்டே வார கால இடைவெளியில் அந்தச் சின்னத்தை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தோம்.

ஆனாலும், நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பல விஷயங்கள் நமது வெற்றி பறிப்போகக் காரணமாக இருந்தாலும், இன்னொரு முக்கிய காரணமும் மறுக்க முடியாத உண்மையாக நமது கழகத் தோழர்களே சுட்டிக்காட்டியதை இங்கே சொல்ல விரும்புகிறேன்.

நமது சின்னமாக இருந்த பரிசுபெட்டகத்தை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தாலும், நாம் சுயேச்சைகள் என்பதால் மிகப் பெரும்பாலான தொகுதிகளில் நமது சின்னம், இரண்டாவது மற்றும் மூன்றாவது வாக்குப்பதிவு இயந்திரங்களில் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. நமக்கு வாக்களிக்க விரும்பியும் நமது சின்னத்தைத் தேடுவதில் கிராமப்புற மக்கள் பட்ட சிரமங்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இத்தகைய சட்ட ரீதியான, நடைமுறை ரீதியான சங்கடங்கள், தடைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வாகத்தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் நமது இயக்கத்தை ஓர் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணியை வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களிலேயே நாம் ஆரம்பித்தோம். நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் நாம் ஒரு பின்னடைவைச் சந்தித்திருக்கும் இந்த நேரத்தில், ஆட்சி அதிகாரத்தைக் காட்டி மிரட்டி, பதவி ஆசை காட்டி ஆளும் கட்சியும், நமது இயக்கத்தை பலவீனப்படுத்திவிடலாம் என்ற நப்பாசையுடன் எதிர்க்கட்சியும் சேர்ந்து நம்மில் சிலரை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும், நமது இயக்கத்திற்கு நிஜமான மக்கள் ஆதரவு இருக்கிறது... எதிர்காலத்திலும் வலுவான இயக்கமாக, மக்கள் நலன் காக்கும் வகையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்புள்ள இயக்கமாக இருக்கப்போகிறது என்ற யதார்த்த உண்மையை புரிந்துகொண்டு, அம்மாவுக்கே துரோகம் செய்த கூட்டத்துக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற தாகத்தோடு, லட்சோப லட்சம் தொண்டர்கள், அம்மாவின் உண்மையான விசுவாசிகள் என்ற அடையாளத்தோடு இந்த இயக்கத்தில் துடிப்போடு தொடர்ந்து பணியாற்றிவரும் நீங்கள், வேலூர் தேர்தல் களத்தையும் சந்திக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

ஆனால், நமது இயக்கத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணி ஆகஸ்ட் மாத இறுதிவாக்கில் நிறைவுபெறக்கூடும். அதுவரை நாம் சுயேச்சை என்ற அடையாளத்தோடுதான் தேர்தல் களத்தில் அறியப்படுவோம். அந்த அடிப்படையில் பல சின்னங்களில் போட்டியிடுவது மக்களிடம் மட்டுமல்ல... நமது தொண்டர்கள் மத்தியிலும் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த யதார்த்த சூழலை மனதில் கொண்டு, நமது இயக்கத்தின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து, வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறோம். நீங்களும் அதை உணர்ந்து ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 'இந்த முடிவு பயத்தின் காரணமாக எடுக்கப்பட்டது... தேர்தல் களத்தைக் கண்டு அ.ம.மு.க பயப்படுகிறது...' என்றெல்லாம் நமது எதிரிகள் திட்டமிட்டு விஷமப் பிரச்சாரம் செய்யக்கூடும். அவற்றையெல்லாம் புறந்தள்ளுங்கள்.

நமது இயக்கத்துக்கான நிரந்தரமான புதிய அடையாளத்தோடு மக்களைச் சந்திப்போம்... வெற்றிகளை ஈட்டுவோம்... தமிழகத்தை இந்த துரோகக் கூட்டத்திடம் இருந்து மீட்போம்!

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com