பி.இ.கலந்தாய்வு: முதல் நாளிலேயே முடங்கியது வலைதளம்: முன்வைப்புத் தொகைக்கு கூடுதல் அவகாசம்

பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வில் முதல்நாளான திங்கள்கிழமை,  வலைதளம் முடங்கியதால் இடங்களைத் தேர்வு செய்ய முடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.


பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வில் முதல்நாளான திங்கள்கிழமை,  வலைதளம் முடங்கியதால் இடங்களைத் தேர்வு செய்ய முடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில், முதல் சுற்று மாணவர்கள் முன்வைப்புத் தொகையைச் செலுத்த கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பிரிவு மாணவர்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடத்தப்படுகின்றது. முதல் சுற்றில், தரவரிசையில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் முதல், 9,872 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில் 6,587 பேர் மட்டுமே உரிய கால அவகாசத்துக்குள் முன்வைப்புத் தொகையைச் செலுத்தினர். 
இவர்கள், ஆன்லைனில் இடங்களைத் தேர்வு செய்வது திங்கள்கிழமை தொடங்கியது. வரும்  புதன்கிழமை (ஜூலை 10) வரை இவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இடங்களைத் தேர்வு செய்வதற்கான அவகாசம், தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமை வலைதளம் முடங்கியது. இதனால் மாணவர்களும், பெற்றோரும் கடும் அவதிக்கு ஆளாகினர். வீட்டில் வசதியின்றி, சென்னை தரமணியில் மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள உதவி மையத்தில் இடங்களைத் தேர்வு செய்வதற்காக வந்திருந்த மாணவர்களும் அவதிக்கு ஆளாகினர். இதுகுறித்து அங்கு வந்த மாணவரின் தந்தை கூறுகையில், காலையில் வீட்டிலேயே ஆன்-லைனில் முயற்சித்தபோது, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக இணையதளம் செயல்படவில்லை. அதனால், தரமணி உதவி மையத்துக்கு வந்தோம். 
இங்கும் சர்வர் முடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார். இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் கூறியது: கலந்தாய்வு சர்வர் சிறிது நேரம் முடங்கியது. அது உடனடியாக சரி செய்யப்பட்டுவிட்டது. முதல் நாளில் 2,282 மாணவர்கள் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். 
இவர்கள் புதன்கிழமை (ஜூலை 10) வரை இடங்களைத் தேர்வு செய்யலாம். அதன் பின்னர் வியாழக்கிழமை  (ஜூலை 11) அவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு வெளியிடப்படும். அதை அவர்கள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் உறுதிப்படுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு சனிக்கிழமை  (ஜூலை 13 ) வெளியிடப்படும். 
கூடுதல் அவகாசம்: அதே நேரம், மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்று வரும் மாணவர்களுக்கு முன் வைப்புத் தொகையைச் செலுத்த புதன்கிழமை வரை  கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com