மாநிலங்களவைத் தேர்தல்:அதிமுக வேட்பாளர்கள் மனுதாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அ.முஹம்மதுஜான், என்.சந்திரசேகரன், பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வேட்பு மனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்தனர்.
மாநிலங்களவை தேர்தலில்  போட்டியிடுவதற்காக  தேர்தல் அதிகாரி சீனிவாசனிடம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த பாமக  வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் . 
மாநிலங்களவை தேர்தலில்  போட்டியிடுவதற்காக  தேர்தல் அதிகாரி சீனிவாசனிடம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த பாமக  வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் . 


மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அ.முஹம்மதுஜான், என்.சந்திரசேகரன், பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வேட்பு மனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்தனர்.
 தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கானத் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டது. சட்டப் பேரவையில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 3 இடங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
திமுக-அதிமுக வேட்புமனு: திமுக வேட்பாளர்கள் ஏற்கெனவே வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ள நிலையில், அதிமுக வேட்பாளர்கள் அ.முஹம்மதுஜானும், என்.சந்திரசேகரனும் தங்களது வேட்பு மனுக்களை திங்கள்கிழமை காலை தாக்கல் செய்தனர். இதேபோன்று, மக்களவைத் தேர்தலின்போது செய்து கொண்ட உடன்பாட்டின் படி, பாமகவுக்கு ஒரு மாநிலங்களவைத் தொகுதி அளிக்கப்பட்டது. இந்த இடத்துக்கு அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.  அதன்படி, அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனுக்களை இவர்கள் மூவரும் சட்டப் பேரவைச் செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான கி.சீனிவாசனிடம் அளித்தனர். அப்போது, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இன்று மனுக்கள் பரிசீலனை: மாநிலங்களவைத் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 
செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) நடைபெறுகிறது.
திமுக சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனுவும் பரிசீலிக்கப்பட உள்ளது.  அவர் மீது ஏற்கெனவே தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு விவரத்தை தனது வேட்புமனுவிலும் வைகோ குறிப்பிட்டுள்ளார். எனவே, வேட்புமனு பரிசீலனையின்போது, வைகோ தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது செவ்வாய்க்கிழமை தெரிந்துவிடும்.
வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற ஜூலை 11-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். காலியிடமாக அறிவிக்கப்பட்டுள்ள ஆறு இடங்களுக்கு மேலாக வேட்பாளர்களின் எண்ணிக்கை இருக்கும்பட்சத்தில் வரும் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தலில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிப்பர். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அன்று மாலையே அறிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com