காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை நில விவகாரம்: தமிழக அரசு உத்தரவை உறுதி செய்து  உயர்நீதிமன்றம் உத்தரவு

காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட வனத்துறைக்குச் சொந்தமான 29.33 ஏக்கர் நிலத்தை வனத்துறையே திரும்ப எடுத்துக் கொள்ளும் தமிழக அரசின் உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை நில விவகாரம்: தமிழக அரசு உத்தரவை உறுதி செய்து  உயர்நீதிமன்றம் உத்தரவு


காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட வனத்துறைக்குச் சொந்தமான 29.33 ஏக்கர் நிலத்தை வனத்துறையே திரும்ப எடுத்துக் கொள்ளும் தமிழக அரசின் உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளைக்கு, கடந்த 1975ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் நன்மங்களத்தில் உள்ள வனத்துறைக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை, ஏக்கர் ரூ.100 வீதம், முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கினார். இந்த நிலையில் அறக்கட்டளை நிர்வாகம் பயன்படுத்தாத 29.33 ஏக்கர் நிலத்தை வனத்துறை கையகப்படுத்த கடந்த 2012ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதனை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கல்லூரி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 
இந்த உத்தரவை எதிர்த்து கல்வி அறக்கட்டளை சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அறக்கட்டளை தரப்பில் வழக்குரைஞர் என்.ஜி.ஆர். பிரசாத்தும், தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயணும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கல்லூரி அறக்கட்டளை பயன்பாட்டில் உள்ள 10.67 ஏக்கர் நிலத்தில், இரண்டு ஏக்கருக்கும் குறைவான இடத்திலேயே கட்டடங்கள் கட்டப்பட்டு கல்லூரி இயங்கி வருவதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கில் கல்லூரி நிர்வாகம் பயன்படுத்தாத 29.33 ஏக்கர் நிலத்தை வனத்துறை திரும்ப எடுத்துக்கொள்ள தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சரியானதுதான். எனவே, இந்த வழக்கில் ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள 10.67 ஏக்கர் நிலத்தில் 6 மாத காலத்துக்குள் 500 பலன்தரும் மரக்கன்றுகளை நட்டு அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். கல்லூரி நிர்வாகத்தின் வசம் உள்ள 10.67 ஏக்கர் நிலத்தைச் சுற்றிலும் 6 மாத காலத்துக்குள் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும். ஒருவேளை இந்த நிபந்தனைகளை பின்பற்றவில்லை என்றால், கல்லூரி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எஞ்சிய நிலங்களையும் வனத்துறை கைப்பற்றலாம். மேலும், இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தகுந்த ஆதாரங்களுடன் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, அறக்கட்டளை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com