மேக்கேதாட்டு அணை விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வர் கே.பழனிசாமி கடிதம்

மேக்கேதாட்டு அணை தொடர்பாக கர்நாடகத்தின் பரிந்துரைகளை, நடைபெறவுள்ள மத்திய அரசுக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.  
மேக்கேதாட்டு அணை விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வர் கே.பழனிசாமி கடிதம்


மேக்கேதாட்டு அணை தொடர்பாக கர்நாடகத்தின் பரிந்துரைகளை, நடைபெறவுள்ள மத்திய அரசுக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.  
 இதுகுறித்து, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
     மேக்கேதாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகத்தின் திட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது எனவும், அந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமெனவும் கடந்த 24ஆம் தேதியிட்ட கடிதத்தில் பிரதமரை வலியுறுத்தினேன். இந்த நிலையில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடுகள் துறையின் கீழ் இயங்கும் நதி நீர் மற்றும் நீர் மின் திட்டங்களுக்கான நிபுணர் குழுவின் கூட்டம் வரும் 19ஆம் தேதி நடைபெறவிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இந்தக் குழுவின் கூட்டத்தில் மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டும் கர்நாடகத்தின் பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்கப்பட இருப்பதாக எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவுக்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் முற்றிலும் எதிரானதாகும்.
  நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவுக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிராக மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு தமிழக அரசு தொடர்ந்து கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறது. இதுபோன்ற அணைத் திட்டங்களுக்கு கர்நாடக அரசானது தமிழக அரசு மற்றும் காவிரி நதிநீர் சார்ந்த பிற மாநிலங்களிடமோ ஒப்புதல் எதையும் பெறுவதில்லை.
காவிரி நதிநீர் படுகை என்பது நீர்ப் பற்றாக்குறை உள்ள படுகையாகவே இருந்து வருகிறது. இதில், மேக்கேதாட்டு அல்லது வேறெந்த அணை திட்டங்களையாவது காவிரி நதியின் மேற்பகுதியில் இருக்கும் கர்நாடகம் போன்ற  மாநிலங்கள் செயல்படுத்தினால் நதியின் கீழ்புறம் இருக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு கடுமையாகப் பாதிப்பு ஏற்படும்.
காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடுகள் துறையின் கீழ் இயங்கும் நதிநீர் மற்றும் நீர் மின் திட்டங்களுக்கான நிபுணர் குழுவின் 25ஆவது கூட்டம் வரும் 19ஆம் தேதி நடைபெறவிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் கர்நாடகத்தின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட நிபுணர் குழுவுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், வருங்காலத்தில் இதுபோன்று வரக்கூடிய கர்நாடகத்தின் பரிந்துரைகள், திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிட வேண்டும். காவிரி படுகைப் பகுதியில் எத்தகைய திட்டத்துக்கும் கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய நீர்வள அமைச்சக அதிகாரிகளுக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும். 
தமிழகம் உள்பட காவிரி நதிநீர் சார்ந்த மாநிலங்களின் அனுமதி இல்லாமல், கர்நாடகத்தின் எந்தத் திட்டத்துக்கும் அனுமதி தரக் கூடாது என்று தனது கடிதத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com