வேலூர் ஆவின் பொது மேலாளர் பணியிடை நீக்கம்

வேலூர் ஆவின் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக அதன் பொது மேலாளர் கோதண்டராமன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வேலூர் ஆவின் பொது மேலாளர் பணியிடை நீக்கம்


வேலூர் ஆவின் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக அதன் பொது மேலாளர் கோதண்டராமன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை ஆவின் மேலாண் இயக்குநர் காமராஜ் பிறப்பித்துள்ளார். 
வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு ஒன்றியமான ஆவின் தலைமை அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. இங்கு தினமும் இரு மாவட்ட பால் உற்பத்தியாளர்க ளிடமிருந்து சுமார் 5.16 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 2 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. மீதமுள்ள பாலில் 72 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டாகவும், நெய், பால் கோவா, மோர், லஸ்ஸி உள்ளிட்ட துணைப் பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன. 
இந்நிலையில், பால் கொள்முதலில் தண்ணீர் கலந்து முறைகேடு செய்யப்பட்டிருப்பது அண்மையில் நடந்த தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, ஆவின் அதிகாரிகள் 5 பேர் இடைநீக்கம் செய்யப் பட்டனர். இதன்தொடர்ச்சியாக, ஆவின் பொது மேலாளர் கோதண்டராமன் செவ்வாய்க்கிழமை திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை ஆவின் மேலாண் இயக்குநர் காமராஜ் பிறப்பித்தார். நிர்வாகக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
கோதண்டராமனுக்கு முன்பு பொது மேலாளராக இருந்த முரளிபிரசாத் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கண்டுபிடித்தனர். முரளிபிரசாத் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக கோதண்டராமன் பணியில் சேர்ந்தார். தற்போது அவரும் அதேபோன்ற புகாரில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 
இதையடுத்து, திருவண்ணாமலை ஆவின் உதவி பொது மேலாளர் கணேசன், பொது மேலாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com