மத்திய பட்ஜெட்டுக்கு மாநிலங்களவையில் அதிமுக பாராட்டு

மாநிலங்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற 2019-2020-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்ற அதிமுக உறுப்பினர்கள் பட்ஜெட்டை வரவேற்றுப் பேசினர்.
மத்திய பட்ஜெட்டுக்கு மாநிலங்களவையில் அதிமுக பாராட்டு


மாநிலங்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற 2019-2020-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்ற அதிமுக உறுப்பினர்கள் பட்ஜெட்டை வரவேற்றுப் பேசினர்.
கு.வைத்திலிங்கம்: பட்ஜெட்டில் விவசாயிகளின் வருமானத்தை 2022-க்குள் இரு மடங்காக உயர்த்துவோம் என்று கூறியிருப்பதும், விவசாயத் துறைக்கு ரூ.1.39 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும் பாராட்டுக்குரியது. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.65 அதிகரிக்கப்பட்டு ரூ. 1,815 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை ரூ. 2,000 ஆக உயர்த்தித் தர வேண்டும். 
கரும்பு டன்னுக்கு ரூ.5,000, கொப்பரைத் தேங்காய்க்கு குவிண்டாலுக்கு ரூ.12,000 தர வேண்டும். தமிழகத்தில் புயல், வெள்ளம், வறட்சியால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், விவசாயிகள் கூட்டுறவு வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். காவிரி, வைகை, தாமிரபரணி, நொய்யல் நதிகளைப் புனரமைக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பூம்புகாரில் துறைமுகம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
தென்னக நதிகளான கோதாவரி, காவிரி, வைகை, குண்டாறு நதிகளை இணைக்க வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேக்கேதாட்டு உள்பட எந்த அணையையும் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. 
நமது நாட்டின் ஊரக, நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024-க்குள் குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் மிகுந்த வரவேற்பிற்குரியது. தமிழ்நாட்டில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நாட்டில் உள்ள 17 சுற்றுலாத் தலங்கள் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. 
இத்திட்டத்தில் தஞ்சாவூர், மகாபலிபுரம், காஞ்சிபுரம், மதுரை, ராமேசுவரம் ஆகிய சுற்றுலாத் தலங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்திய பொருளாதாரத்தை இன்னும் சில ஆண்டுகளில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதை பாராட்டுகிறேன்.
கே.ஆர். அர்ஜுனன்: மகளிர் தலைமையிலான மேம்பாட்டுக்கு நிதியமைச்சரின் பட்ஜெட் வழிவகுத்துள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களில் குழுவுக்கு ஒருவர் என்ற முறையில் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன் வழங்கும் திட்டத்தை வரவேற்கிறோம். 
அனைத்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கும் ரூ.5 ஆயிரம் மிகைப் பற்று வசதி அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் வரவிருக்கும் பட்ஜெட்டுகளில் இந்தத் தொகையை அதிகரிக்க வேண்டும். புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளுக்கான ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும். மேலும், 
கோவை, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும், சென்னை புறநகர் ரயில்வே சேவைகளை மேலும் மேம்படுத்தவும் வேண்டும். 
விவசாயத் துறையில் பூஜ்ய பட்ஜெட் பண்ணையம் எனும் இயற்கை வேளாண்மை நடைமுறைகள் ஊக்குவிக்கப்படும் எனும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. காந்திபீடியா உருவாக்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதை தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் கொண்டு வர வேண்டும்.
டி.ரத்னவேல்: பட்ஜெட்டில் அமைப்புகள் இல்லாத வணிகர்கள், கடைக்காரர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 
அதேபோல, சிறு, குறு தொழில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்க ரூ.1 கோடி கடன் 59 நிமிடங்களில் பெறுவதற்கான பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க நல்ல வாய்ப்பாக இருக்கும். 
2022-க்குள் கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு வழங்குவது, அனைத்து மக்களுக்கும் கழிப்பறை வசதி, மின் இணைப்பு வழங்க முடிவெடுத்திருப்பது பாராட்டுக்குரியது. தமிழ்நாடு ராணுவ உற்பத்தித் தொழிற்சாலைகள் அமைக்க உகந்த இடமாகும். 
அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் ரூ.61 ஆயிரம் கோடியில் செயல்படுத்த ஏற்கெனவே அரசு அறிவிப்பு செய்துள்ளது. 
அதேபோன்று, தென் தமிழகத்தில் உள்ள வைகை - குண்டாறு நதிகளை காவிரியுடன் இணைக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com