கலிகாலச் செய்திகள்: உலக வங்கி உதவியோடு கட்டப்பட்ட மருத்துவமனையைக் காணவில்லை?

மருத்துவமனையைக் காணவில்லை.. என்ன? தப்பாகச் சொல்லிவிட்டோம்  என்று நினைக்கிறீர்களா? இல்லை சரியாகத்தான் சொல்கிறோம்.
கலிகாலச் செய்திகள்: உலக வங்கி உதவியோடு கட்டப்பட்ட மருத்துவமனையைக் காணவில்லை?


சென்னை: மருத்துவமனையைக் காணவில்லை.. என்ன? ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டோம்  என்று நினைக்கிறீர்களா? இல்லை சரியாகத்தான் சொல்கிறோம்.

இது உண்மை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்திருக்கும் அதிர்ச்சி கலந்த உண்மை.

மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில், உலக வங்கியின் நிதியுதவியோடு பொது சுகாதார மைய மருத்துவமனை கட்டமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த மருத்துவமனை இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு, அந்த நிலம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சிதான் அந்த கட்டடத்தை இடிக்க அனுமதி வழங்கியுள்ளது என்பதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

பொதுப் பயன்பாட்டுக்கான நிலம் விற்பனை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, அந்த நிலத்தில் இருந்த மருத்துவமனைக் கட்டடம் பற்றி ஒரு வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை.

அந்த நிலத்தை மருத்துவமனை கட்ட வைத்திருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் கூறிவந்தாலும், அது தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். அங்கு மருத்துவமனைதான் கட்ட வேண்டும் என்றால், ஏற்கனவே இருந்த கட்டடத்தை ஏன் இடிக்க வேண்டும், அதுவும் மருத்துவமனைக்காகவே கட்டப்பட்ட கட்டடத்தை என்று கேட்கிறார் மாத்தூர் எம்எம்டிஏ பகுதி மக்களின் நல்வாழ்வு சங்கத்தின் உறுப்பினர் சி.எம். ரமேஷ்.

இந்த இடத்தில் மருத்துவமனை கட்ட உலக வங்கி நிதியுதவி பெற்றதோடு, இங்கு இடம் வாங்கிய பொதுமக்களிடம் இருந்து மேம்பாட்டுக் கட்டணமாகவும் இதற்காக பணம் வசூலிக்கப்பட்டதை மக்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

1992ம் ஆண்டு இங்கு கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், அந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டும் மருத்துவமனையாக செயல்படாமலேயே இடித்துத் தள்ளப்பட்டுவிட்டது. 

தற்போது இப்பகுதியில் வசிக்கும் மக்கள், ஒன்று மணலியில் உள்ள பொது சுகாதார மையத்துக்கோ அல்லது மாதவரம் பால் பண்ணைக் காலனிக்கோ தான் செல்ல வேண்டும். ஏற்கனவே மணலி மருத்துவமனையில் கூட்டம் அலைமோதுகிறது. மாதவரம் ஆரம்ப சுகாதார மையங்களில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இருப்பதில்லை. அங்கு நிகழும் சுகப்பிரசவங்களையே, உடன் இருப்பவர்கள்தான் மேற்கொள்வதாகக் குற்றம்சாட்டுகிறார்கள். அப்படி இருக்கும் போது அங்கு எப்படி செல்வது என்று கேள்வி எழுப்புகிறார்கள் ஊர் மக்கள்.

இது பற்றி கேள்வி எழுப்பினால், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுபப்தாக மாநகராட்சி அதிகாரிகள் பதில் சொல்வதோடு சரி, வேறு எதுவும் நடப்பதில்லை என்றும் பெருமூச்சோடு கூறுகிறார்கள்.

இது குறித்து மூத்த அதிகாரியிடம் கேட்டபோது, இதுபோன்ற இரண்டு இடங்களை தனியார் வாங்கியுள்ளனர். ஒன்று காலியாக இருந்த அரசு நிலம், ஆனால், மற்றொன்று மருத்துவமனைக் கட்டடம் இருந்த இடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அது எப்படி விற்கப்பட்டது என்பது எனக்குத் தெரியவில்லை. இது பற்றி விசாரிக்கிறேன் என்கிறார்.

இப்படி அதிகாரவட்டத்தில் இருப்பவர்களுக்கே இது கேள்விக்குறியாக இருக்கிறது என்றால் அப்பாவி பொதுமக்களுக்கு மட்டும் ஆச்சரியக்குறியாகவா இருக்கப் போகிறது.. இல்லை அதிர்ச்சியாக மட்டும்தான் இருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com