திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கு அகற்றப்படும்: திமுக உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பதில்

திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கு அகற்றப்பட்டு அங்குள்ள நிலம் மீட்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கு அகற்றப்பட்டு அங்குள்ள நிலம் மீட்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். 
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, இதுகுறித்த பிரச்னையை திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ., அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திமுக) எழுப்பினார். அப்போது பேசிய அவர், அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் தீ ஏற்பட்டு அதனால் ஏற்படும் புகை அருகிலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் பரவுகிறது. குப்பைக் கிடங்குக்கு அருகேயுள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், குடியிருப்பில் வசிப்பவர்கள் இடம் மாறிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்றார்.
இதற்கு அமைச்சர் வேலுமணி அளித்த பதில்:-
தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை என்பது அதிக சவாலாக இருக்கிறது. மாநிலத்தில் மொத்தமாக நாளொன்றுக்கு 18 ஆயிரத்து 420 டன் குப்பைகள் சேகரமாகின்றன.  திருச்சியில் நாள்தோறும் 420 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அரியமங்கலம் கிடங்கிலுள்ள குப்பைகளை உரம் தயாரிக்கவும், மறுசுழற்சிக்காகப் பயன்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இரண்டரை ஆண்டுகளுக்குள்ளாக அரியமங்கலம் குப்பைக்கிடங்கு முழுமையாக அகற்றப்பட்டு 45 ஏக்கர் நிலம் மீட்கப்படும். மீத்தேன் வாயுக்கள் மற்றும் காற்றினால் தீப்பிடிக்கும் சூழலை தடுப்பதற்காக நாள்தோறும் லாரிகள் மூலமாக தண்ணீர் தெளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com