மனுநீதிச் சோழன், சிபி சக்ரவர்த்தி, பண்டிய மன்னனை நினைவு கூர்ந்த முதல்வர் பழனிசாமி

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் பழனிசாமி, மனுநீதிச் சோழன், சிபி சக்ரவர்த்தி, பண்டிய மன்னனை நினைவு கூர்ந்தார்.
மனுநீதிச் சோழன், சிபி சக்ரவர்த்தி, பண்டிய மன்னனை நினைவு கூர்ந்த முதல்வர் பழனிசாமி


சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் பழனிசாமி, மனுநீதிச் சோழன், சிபி சக்ரவர்த்தி, பண்டிய மன்னனை நினைவு கூர்ந்தார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி ஆற்றிய உரையில், “நீதிக்கு முன் அனைவரும் சமம்” என்ற கொள்கையை உறுதியாக கடைபிடிக்கும் மாநிலம் தமிழ்நாடாகும். நீதி கேட்ட பசுவிற்காக, அதன் கன்றை கொன்ற தனது மகனை தேர் காலில் இட்டு கொன்ற மனுநீதி சோழன், நீதி தவறியதற்காக தனது உயிரை விட்ட பாண்டிய மன்னன், புறாவிற்காக தனது தொடையிலிருந்து சதையை அறுத்துக் கொடுத்த சிபி சக்கரவர்த்தி போன்ற நீதிக்கு தலை வணங்கும் எண்ணற்ற மன்னர்கள் வாழ்ந்த நாடு தமிழ்நாடு.

இந்திய அரசியலமைப்பின்படி, நீதித் துறை, ஆட்சித் துறை, சட்டமன்றம் மற்றும் பத்திரிகைத் துறை ஆகிய நான்கு தூண்கள் தங்கள் எல்லைக்குள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ முடியும். தமிழ்நாட்டில் இந்த நான்கு பிரிவுகளும் சுதந்திரமாக செயல்படுகின்றன என்பதை நான் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தெற்காசிய நாடுகளில், சட்டக் கல்விக்கென தோற்றுவிக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம், நமது டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம். ஆசியாவிலேயே மிகக் குறைவான கல்விக் கட்டணத்தில் தரமான சட்டக் கல்வியை வழங்கி வருகிறது. இந்த பல்கலைக் கழகத்திற்கென தனியாக சென்னையிலுள்ள பெருங்குடியில் 62 கோடி ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய வளாகம் அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.

சட்டக்கல்வி மேம்பாட்டிற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் ஒரு சிலவற்றை இங்கே கூற விரும்புகிறேன்.

  • திருச்சிராப்பள்ளியில் தேசிய சட்டப் பள்ளி துவக்கப்பட்டுள்ளது
  • தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணாக்கர்களுக்கும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் குறைந்த செலவில் சட்டக் கல்வியை வழங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 13 சட்டக் கல்லூரிகளில், 11 சட்டக் கல்லூரிகள் அரசு சட்டக் கல்லூரிகளாகும்.
  • கடந்த ஆண்டு மட்டும், புதிதாக 3 அரசு சட்ட கல்லூரிகளை நாங்கள் துவக்கினோம். இந்த ஆண்டு, மேலும் 3 புதிய அரசு சட்ட கல்லூரிகள் துவங்கப்படவுள்ளன.
  • தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்கள் கட்டுதல், நீதிபதிகளுக்கான குடியிருப்பு கட்டுதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றிக்காக கடந்த 8 ஆண்டுகளில் 998 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
  • நாட்டிலுள்ள சட்ட பல்கலைக்கழகங்களில் முதன் முறையாக மிகப்பெரிய அளவில் ஏஐஆர் (AIR) இணைய வழி சட்டத் தொகுப்பகம் மற்றும் சட்டச்செயலி பகிர்வகம், நமது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் ஒவ்வொரு அரசு சட்டக் கல்லூரிக்கும், அதன் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த உரிய நிதி, அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

“சட்டத்தின் அனைத்து பயன்களும் ஏழை மக்களை சென்றடையும்படி பார்த்துக் கொள்ளும் கூட்டுப் பொறுப்பு அனைவருக்கும் உண்டு” என்றார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. எனவே நீதியரசர்களும், நீதிமன்றங்களும் இந்த இலக்கை அடைய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், அதற்கு தமிழக அரசு உரிய ஒத்துழைப்பை வழங்கும் என்றும் இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com