தபால் துறை எழுத்துத் தேர்வு: இரண்டாம் தாளில் தமிழ் மொழி கட்டாயம்; தபால் துறை அதிகாரிகள் விளக்கம்

தபால் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடைபெறும் தேர்வின் முதல்தாளில் தமிழ் உள்பட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தபால் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடைபெறும் தேர்வின் முதல்தாளில் தமிழ் உள்பட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 இதற்கு விளக்கமளித்துள்ள தபால் துறை நிர்வாகம், "இரண்டாம் தாளில் தமிழ் மொழியில் 40 மதிப்பெண்கள் பெறாமல் யாரும் வேலைக்கு வர முடியாது என்றும், வடநாட்டவர்கள் யாரும் பணிக்கு வர முடியாது' என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 இந்திய தபால் துறையின்கீழ் நாடு முழுவதும் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தபால் நிலையங்களில் காலியாக உள்ள தபால்காரர், மெயில் கார்டு, உதவியாளர், பன்முகத் திறன் ஊழியர் உள்பட பல்வேறு பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
 இந்நிலையில், தபால்துறை பணிகளுக்கான போட்டித் தேர்வு முறையில் இப்போது புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அஞ்சல்துறை முதன்மைப் பணிகளுக்கான முதல்தாள் எழுத்துத் தேர்வினை ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து தலைமை தபால் நிலையங்களுக்கும் மத்திய தொலை தொடர்புத் துறை உதவி தலைமை இயக்குநர் சி.முத்துராமன் ஜூலை 11-ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 தபால் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என்று இரண்டு பகுதிகளாகத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்தத் தேர்வுகளில் மொழியைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதல் தாள் தேர்வு ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும். இரண்டாம் தாள் தேர்வு ஆங்கிலம் மற்றும் தேர்வர்கள் விரும்பும் மாநில மொழிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்தப் புதிய தேர்வு முறைக்கு அஞ்சல் துறையில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இது குறித்து அகில இந்திய தபால் ஊழியர் சங்கத்தின் உதவி பொதுச் செயலாளரும், தபால்காரர்கள் மற்றும் பன்முகத் திறன் ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயலாளருமான கண்ணன் கூறியது: காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மாநில மொழிகளில் எழுதலாம் என்று இருந்தது.
 மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மாநில மொழிகளில் எழுத்துத் தேர்வினை எழுத மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முடிவை கைவிட்டனர். 2015-16-ஆம் ஆண்டு காலிப் பணியிடங்களுக்கான தேர்வில் தமிழ் தெரியாத வடமாநிலத்தவர்கள் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண் எடுத்தனர். இதுதொடர்பாக நீதிமன்றத்துக்குத் சென்றோம். இந்த பிரச்னையை தொடர்ந்து, 2017-இல் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணையில் உள்ளது.
 இந்நிலையில், தபால் துறை தேர்வில் தமிழர்கள் வரக்கூடாது என்ற நோக்கத்தில் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், ஆங்கிலம், ஹிந்தியில் தான் தேர்வு எழுதவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வடநாட்டினர் ஹிந்தி மொழியில் தேர்வு எழுதி வந்து விடுவார்கள். இதனால், தமிழர்களுக்கு வாய்ப்புகள் பறிக்கப்படும் நிலை உள்ளது. இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மாநில மொழிகளில் தேர்வு எழுத உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கடுமையான போராட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
 இது குறித்து அஞ்சல்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "தமிழகத்தில் தமிழ் தெரியாமல் பணிக்கு யாரும் வரமுடியாது. முதலில் எழுத்துத் தேர்வுக்கு ஒரு தாள் மட்டும் இருந்தது. இப்போது எழுத்துத் தேர்வுக்கு இரண்டு தாள்களாக உள்ளன. முதல்தாளில் ஹிந்தி, ஆங்கிலம் இருப்பதால், வடநாட்டவர்கள் வந்து விடலாம் என்று கூறுகின்றனர். அது முற்றிலும் தவறு. இரண்டாம் தாளில் தமிழ் மொழியில் 40 மதிப்பெண்கள் கட்டாயம் எடுக்க வேண்டும். அப்போது தான் தபால் பணிக்கு வரமுடியும். தமிழ் மொழி தெரியாமல் யாரும் பணிக்கு வரமுடியாது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com