அஞ்சல் துறை தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும்: நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

அஞ்சல் துறை மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்புக்கான தேர்வை ஆங்கிலம், ஹிந்தி மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
அஞ்சல் துறை தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும்: நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

அஞ்சல் துறை மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்புக்கான தேர்வை ஆங்கிலம், ஹிந்தி மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
மக்களவையில்  திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு: ஐ.ஏ.எஸ்.,  ஐ.எஃப்.எஸ். போன்ற அகில இந்திய தேர்வுகளை நடத்துவது தொடர்பாக  மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது,   இந்திய அரசு 2013, மார்ச் 3-இல் ஓர் அறிவிக்கையை வெளியிட்டது. அதில்,  அகில இந்திய தேர்வுகளை ஹிந்தி,  ஆங்கிலம் அல்லது அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் எழுத முடியும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், அஞ்சல் துறை  சி' மற்றும் டி' பிரிவு ஊழியர்கள் 986 பேரை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்வில் வினாத்தாள்கள் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இருந்துள்ளது. பிராந்திய மொழிகளில் வினாத்தாள் ஏதும் இல்லை. பிராந்திய விருப்பங்களை இந்த அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.  அரசு அறிவிக்கை இருந்தும்கூட தமிழக மக்களின் விருப்பங்களை அரசு  நிராகரித்திருக்கிறது. ஆகவே, தேர்வை திரும்பப் பெற்று புதிதாக தமிழில் தேர்வு நடத்தப்பட வேண்டும். 
மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் ஏ.நவநீதகிருஷ்ணன்: ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அஞ்சல் துறை தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். ரத்து செய்யாவிட்டால், அனைத்து மாணவர்களின் வாழ்க்கை பாழாகிவிடும். தபால்காரர்,  மெயில் கார்டு, உதவியாளர்கள் பணியிடங்களுக்கு, கிராமப்புறங்களில் பணியாற்றும் வகையில் இத்தேர்வை அஞ்சல் துறை நடத்தியுள்ளது. தேர்வுக்கான வினாத் தாள்கள் ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. வினாத்தாள் தமிழில் இல்லை.  சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இதை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. இது ஓரளவுக்கு நிவாரணத்தை அளித்துள்ளது. ஆனால், முன்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, நிவாரணம் அளித்த போதும், உச்ச நீதிமன்றம் அதை நிராகரித்து உத்தரவிட்டது. வேலைவாய்ப்பு உரிமைக்கான விஷயத்தில் வழக்கின் தீர்ப்பை சார்ந்திருக்க முடியாது.  எனவே, தற்போது நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும், தமிழ் வினாத் தாள்களுடன்கூடிய தேர்வை அஞ்சல் துறை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக உறுப்பினர் திருச்சி சிவா:  இதுபோன்ற தேர்வு ஹிந்தி,  ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் முன்பு நடத்தப்பட்டது. ஆனால், தற்போது ஹிந்தி, ஆங்கிலத்தில்  மட்டுமே நடத்தப்படுகிறது. ஏற்கெனவே, ரயில்வே உள்ளிட்ட  பிற மத்திய அரசின் துறைகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வேலை பெற முடிவதில்லை என்ற உணர்வு இருந்து வருகிறது. 
இந்நிலையில், ஏற்கெனவே பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டு வந்த நடைமுறை திரும்பப் பெறப்பட்டிருப்பது முற்றிலும் தேவையற்றதாகும். இது கிராமப்புற மாணவர்களுக்கு பெரிய பின்னடைவாகும்.  எனவே, இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்போது, அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டிடம், இந்த விவகாரம் மிகவும் முக்கியமானதாகும். இதனால், இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும்' என அவைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com