ரூ. 300 கோடியில் சாலைப் பாதுகாப்புப் பணிகள்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

நடப்பாண்டில் சாலைப் பாதுகாப்புப் பணிகள் ரூ.300 கோடியில்  மேற்கொள்ளப்படும் என்று பேரவையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.
ரூ. 300 கோடியில் சாலைப் பாதுகாப்புப் பணிகள்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு


நடப்பாண்டில் சாலைப் பாதுகாப்புப் பணிகள் ரூ.300 கோடியில்  மேற்கொள்ளப்படும் என்று பேரவையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நெடுஞ்சாலைகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:
நடப்பாண்டில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பிலும்,  சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.100 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பிலான சாலைப் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலுக்குச் செல்லும் சாலைகளில் ரூ.58.50 கோடி மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையப் பயிற்சி நிலையத்தில், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்குத் தொடர்ச்சியாக பயிற்சிகள் அளிப்பதற்கு 26 பதவிகளில் 68 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். நெடுஞ்சாலைத் துறையின் அலுவலகக் கட்டடங்கள், அலுவலகக் குடியிருப்புகள் ரூ.26.50 கோடியில் கட்டப்படும். 1,456 கி.மீ. நீள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளை மேம்பாடு செய்து, இதர மாவட்டச் சாலைகளாகத் தரம் உயர்த்தப்படும். 17 மாவட்டங்களில் உள்ள 379 கிராமங்களில் வசிக்கும் 9 லட்சத்து 59,356 மக்கள் பயனடையும் வகையில் ரூ.155.80 கோடி மதிப்பீட்டில் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளில் 42 ஆற்றுப் பாலங்கள் கட்டப்படும்.
மதுரை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் 3 ரயில்வே மேம்பாலங்கள் புதிதாக கட்ட விரிவான திட்ட அறிக்கை ரூ.1.08 கோடியில் தயாரிக்கப்படும். 9 மாவட்டங்களில் 32 இடங்களில் ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலங்கள் கட்டுவதற்கு ரூ.3.50 கோடி செலவில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றார்.
சென்னையில் 13 மேம்பாலங்கள் கட்ட  ரூ.1,122 கோடியில் நிலம் கையகப்படுத்தப்படும்
நெடுஞ்சாலைத்துறையில் சென்னைக்காக முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:
சென்னை பெருநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் காட்டுப்பாக்கம், அக்கரை, அம்பத்தூர், ஆவடி, மாதவரம், ராமாபுரம், குன்றத்தூர், கைவேலி, சேலையூர், கொரட்டூர், வடபழனி - பி.டி. ராஜன் சாலை சந்திப்பு, மத்திய கைலாஷ் மற்றும் மடிப்பாக்கம் ஆகிய 13 இடங்களில் சாலை மேம்பாலம், பாடிகுப்பத்தில் ஒரு உயர்மட்ட பாலம், கேந்திரிய வித்யாலயா மற்றும் தாம்பரத்தில் உயர்மட்ட நடைபாதை, கொரட்டூரில் ஒரு ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்துதல் மற்றும் அம்பத்தூரில் ரயில்வே மேம்பாலம் ஆகிய பணிகள் புதிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும்.
இந்தத் திட்டத்துக்கு தேவைப்படும் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் முதல்கட்டமாக ரூ.1,122 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும். 
கிழக்கு கடற்கரை சாலை மற்றும் திருவான்மியூர் எல்.பி. சாலை சந்திக்கும் இடத்தில் மேம்பாலம் கட்டும் பணி, கிழக்கு கடற்கரைச் சாலையை நான்கு வழித்தடத்திலிருந்து ஆறு வழித்தடமாக அகலப்படுத்தும் பணி மற்றும் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலைப் பணி ஆகியவை ரூ.299 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், சென்னை ராஜீவ்காந்தி சாலையில் டைடல் பார்க் சந்திப்பில் இரண்டு யு' வடிவ மேம்பாலங்கள் ரூ.110 கோடி மதிப்பில் கட்டப்படும்.
சென்னைப் பெருநகர பகுதியில் 9 இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு பாலங்கள் கட்டவும், ஓர் இணைப்புச் சாலை அமைக்கவும், ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கை ரூ.2.35 கோடி மதிப்பில் தயாரிக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com