இரட்டை வேடத்தை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வேண்டுகோள் 

இரட்டை வேடத்தை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இரட்டை வேடத்தை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வேண்டுகோள் 

சென்னை: இரட்டை வேடத்தை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் புதனன்று அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. மத்திய அரசின் நடவடிக்கைகளை, மாநில மக்கள் நலன் கருதி துணிவோடு எதிர்க்க வேண்டிய மாநில அரசு “பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்” என்ற முறையில் இரட்டை வேடம் போடுவது ஏன் என கேள்வி எழுகின்றது.

உதாரணமாக நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விதி விலக்கு கோரி பேரவை நிறைவேற்றிய இரு மசோதாக்கள் குறித்து, முதலமைச்சரும் இன்ன பிற அமைச்சர் பெருமக்களும், பிரதமரை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம், விலக்கு கிடைக்குமென உறுதியாக தெரிவித்தார்கள்.

ஆனால் மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதமே, பேரவை மசோதாக்களை நிராகரித்து விட்டோம் என கூறுகின்றது.

இதேபோன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் தினசரி நடைபெற்று வருகின்றன. இது குறித்து எதிர்கட்சித் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். இதற்கு பதில் அளித்த சட்ட அமைச்சர் போராட்டத்தை கொச்சைபடுத்தி பேசியதுடன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்திட அனுமதிக்க மாட்டோம் எனக் கூறுகின்றார். ஆனால் மத்திய அரசு செயல்படுத்திட தொடர்ந்து அனுமதி அளித்து வருகின்றது.

திரைப்பட கலைஞர் சூர்யா கல்வி கொள்கைக்கு எதிராக கருத்து தெரிவித்தார் எனபதற்காக, அமைச்சர் பெருமக்களும், பா.ஜ.க. தலைவர்களும் மிகக் கடுமையான வார்த்தைகளால் சூர்யாவை அர்ச்சனை செய்கின்றனர்.

தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய அரசின் கொள்கைகளை மாநில அரசு ஆதரிக்கின்றதா? எதிர்க்கின்றதா? என்பது வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டு உரிமைகள் நலன்கள் அனைத்தும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படும் நிலையில் மாநில அரசு மவுனம் காப்பதும், மறைமுகமாக ஆதரிப்பதும் கடும் கண்டனத்திற்குரியதாகும். இத்தகைய இரட்டை வேடத்தை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக கைவிட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com