24 மணி நேரமும் இங்கு தண்ணீர் கிடைக்கிறதாம் சென்னைவாசிகளே!

எந்த பிரச்னை எழுந்தாலும், அதில் ஏதோ ஒரு தொழில் மேன்மையடையும் என்பது யதார்த்தம், அதனை உண்மையாக்கிக் கொண்டிருக்கிறது சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை.
24 மணி நேரமும் இங்கு தண்ணீர் கிடைக்கிறதாம் சென்னைவாசிகளே!

எந்த பிரச்னை எழுந்தாலும், அதில் ஏதோ ஒரு தொழில் மேன்மையடையும் என்பது யதார்த்தம், அதனை உண்மையாக்கிக் கொண்டிருக்கிறது சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை.

பழைய வண்ணாரப்பேட்டை, மண்ணடி, சௌகார்பேட்டை போன்ற இடங்களில் மெட்ரோ குடிநீர் வாரியம் வழங்கும் தண்ணீர் போதாத காரணத்தாலும், அடிபம்புகளில் வரும் நீரின் அளவு மோசமாக இருப்பதாலும் மக்கள் தங்கள் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் கலங்கி நின்றனர்.

அப்போதுதான், அப்பகுதிகளில் இருந்த சின்னச் சின்னக் கடைகளின் உரிமையாளர்களுக்கு ஒரு யோசனை உதித்தது.

அதாவது, தங்களது கடையில் மிகப்பெரிய தண்ணீர் டேங்க் ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு தண்ணீர் டேங்கர் லாரிகளில் தண்ணீரை வாங்கி நிரப்பி, அந்த நீரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து லாபம் பார்க்கிறார்கள்.

அதாவது, ஒரு குடத்துக்கு ரூ.10 முதல் 15 வரையிலும், ஒரு குடிநீர் கேனுக்கு ரூ.15 - 18 வரையிலும் இந்த கடைகளில் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. மெட்ரோ குடிநீர் வாரியம் ஒரு குடம் தண்ணீரை ரூ.1 - 3க்கு விற்பனை செய்யும் நிலையில், இது மிகப்பெரிய லாபமாக பார்க்கப்படுகிறது.

இந்தக் கடைகளில் 24 மணி நேரமும் தண்ணீர் விற்பனை செய்யப்படுவதாக உள்ளூர் பகுதி மக்கள் கூறுகிறார்கள். சீல் வைக்கப்பட்ட குடிநீர் 35க்கு விற்பனையாகும் போது இது குறைவுதான் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த கடைகளில் இரவு பகல் பாராமல் முழு நேரமும் தண்ணீர் கிடைகிறது. மெட்ரோ வாட்டர் டேங்கர்களுக்காக காத்திருப்பது போல் இங்கே காத்திருக்க வேண்டாம். அடிபம்புகளில் கூட ஒரு சில மணி நேரங்கள்தான் தண்ணீர் வருகிறது என்று கூறுகிறார் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நஸ்ரத் பாத்திமா.

பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் மின்ட் ஸ்ட்ரீட் பகுதியில் இருக்கும் இதுபோன்ற 4 கடைகளை எக்ஸ்பிரஸ் குழு ஆய்வு செய்தது. இந்த கடைகளின் உரிமையாளர்களிடம் பேசிய போது, மாதவரம், ரெட்ஹில்ஸ், விச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து நிலத்தடி நீரை கொண்டு வந்து கொடுக்கும் தனியார் டேங்கர் லாரிகளில் இருந்துதான் நாங்கள் தண்ணீர் வாங்குகிறோம். 

சௌகார்பேட்டையில் மட்டும் இதுபோன்று 15 கடைகள் உள்ளன. இந்த தொழிலை கடந்த ஒரு மாதமாகத்தான் தாங்கள் செய்வதாகவும் சிலர் கூறியுள்ளனர். இவர்கள் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் லிட்டர் தண்ணீரை விற்பனை செய்கிறார்கள். இவர்களது மாத லாபம் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்திருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், ஏப்ரல் மாதத்தை விட தற்போது ஒரு டேங்கர் லாரிக்கான தண்ணீர் ரூ.1500 விலை கூடியுள்ளது. 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரை ரூ.4500 கொடுத்து வாங்குகிறோம் என்கிறார்கள்.

சிறு வணிகர்கள் தற்போது தண்ணீர் வியாபாரம் செய்து அதில் லாபம் பார்த்து வருகிறார்கள்.

இடியாப்பம் சுட்டு விற்பனை செய்து வந்தோம். பெரிய அளவில் லாபம் இல்லை. இப்போது ஒரு லிட்டர் தண்ணீரை ரூ.16 - 20க்கு விற்பனை செய்து லாபம் பார்க்கிறோம் என்கிறார் கடையின் உரிமையாளர் ஒருவர். எங்கள் பகுதியில் மட்டும் இதுபோன்ற 5 கடைகள் அமைந்துவிட்டன. நாங்கள் ஆர்ஓ சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்குகிறோம். இது குடிக்கவும் சுகாதாரமானது. 5 குடம் தண்ணீர் கூட கிடைக்காமல் அல்லாடும் மக்களுக்கு இது மிகப்பெரிய அளவில் உதவுகிறது என்கிறார்கள்.

விலை அதிகமாக இருந்தாலும் கூட தேவைப்படும் போது கிடைக்கிறதே என்றும், பேக் செய்த குடிநீர் கேனை விட இது விலை மலிவுதான் என்றும் கூறுகிறார்கள் அப்பாவி பொதுமக்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com