காஞ்சிபுரம் மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு

காஞ்சிபுரம் புற்று நோய் மருத்துவமனையில் புற்று நோய்க்கான மேண்மைமிகு மையம் 120 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு

காஞ்சிபுரம் புற்று நோய் மருத்துவமனையில் புற்று நோய்க்கான மேண்மைமிகு மையம் 120 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று விதி எண்.110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
அம்மாவின் அரசு, புதுப்புது சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்தி மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக விளங்கி வருகிறது. மக்களுக்கு மேலும் தரமான மருத்துவ சேவைகள் கிடைத்திடும் வகையில், நடப்பாண்டில் பின்வரும் புதிய திட்டங்களை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி
அடைகிறேன்:
1. காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனையில் புற்று நோய்க்கான மேண்மைமிகு மையம் ஒன்று 
120 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
2. நோய்த் தடுப்பு, நோய் குறைத்தல், வலி நிவாரணம், புனர்வாழ்வு, சிகிச்சை தரம் உயர்த்துதல் போன்ற 12 ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் வழங்குவதற்காக, மாநிலத்தில் உள்ள கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 105 கோடி ரூபாய் செலவில்
நலவாழ்வு மையங்களாக மாற்றி அமைக்கப்படும்.
3. “அனைவருக்கும் நலவாழ்வு” திட்டத்தின் கீழ், 296 துணை சுகாதார மையங்களுக்கு 79 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
4. ஈரோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நரம்பியல் பிரிவு, இருதய நோய் சிகிச்சை பிரிவு, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நல அறுவை சிகிச்சை பிரிவு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு, தீக்காய சிகிச்சை பிரிவு, சிறுநீரக சிகிச்சை பிரிவு, சீமாங்க் பிரிவு போன்ற உயர் சிறப்பு சிகிச்சை அளிக்க, 67 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் உயர் சிறப்பு மருத்துவமனையாக மேம்படுத்தப்படும்.
5. விபத்துகளில் தலைக்காயம் அடையும் நபர்களை காக்க விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரம் பொன்னான நேரமாக கருதப்படுகிறது. இந்தக் காலத்தில் உரிய முதலுதவியும், சிகிச்சையும் அளிக்கப்பட்டால், இறப்புகளை தவிர்க்கலாம். அந்த வகையில், தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சேவைத் திட்டத்தின் கீழ் 32 மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவமனை வீதம் பல்வகை காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உலகத் தரம் வாய்ந்த ஒரு தீவிர சிகிச்சை மையம் 49 கோடியே ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
6. விபத்திற்கு பின் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் நாள்பட்ட நோயாளிகளுக்கு இயன்முறை சிகிச்சை அளிப்பதற்காக சென்னை கே.கே.நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நவீன வசதிகள் மற்றும் நவீன உபகரணங்களுடன் 40 கோடி ரூபாய் செலவில் மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்படும்.
7. புற்று நோய் சிகிச்சைக்காக சேலம் மாவட்டம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, நடப்பாண்டில் ஒரு லீனியர் ஆக்ஸிலேட்டர் கருவி 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
8. தற்கொலைகளால் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்காக 22 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கட்டணமில்லா ‘104’ தொலைபேசி சேவை வழியாக ஆலோசனை வழங்கும் மையம், 6 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
9. சேலம் சுகாதார மாவட்டம், மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் பெரிய மாவட்டமாக உள்ளது. எனவே, சேலம் சுகாதார மாவட்டத்தை இரண்டாக பிரித்து, ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு, ஒரு புதிய சுகாதார மாவட்டம் ஏற்படுத்தப்படும்.
10. காச நோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 23 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 5 நகர்ப்புற சுகாதார மையங்களில் புதிய முயற்சியாக, 28 வகையான மருந்துகள் வழங்கும் 32 தானியங்கி இயந்திரங்கள் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
11. அரசு மருத்துவமனைகளின் சேவையை மேலும் மேம்படுத்தும் விதத்தில், ஒரு புதிய முயற்சியாக, ஆர்வமுள்ள தொழில் நிறுவனங்களின் சமூக பங்களிப்புடன்
“எனது மருத்துவமனை எனது பெருமை”
என்ற பெயரில் அரசு மருத்துவமனைகள் புதுப் பொலிவுடன் செயல்படும் வகையில் நடவடிக்கை தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com