பள்ளிக்கல்வித்துறையின் அடிப்படையே ஆட்டம் கண்டிருக்கிறது: டிடிவி தினகரன்

பழனிசாமி ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அடிப்படையே ஆட்டம் கண்டிருக்கிறது என்று அமமுக துணைப்பொதுச்ச செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறையின் அடிப்படையே ஆட்டம் கண்டிருக்கிறது: டிடிவி தினகரன்

சென்னை: பழனிசாமி ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அடிப்படையே ஆட்டம் கண்டிருக்கிறது என்று அமமுக துணைப்பொதுச்ச செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் 1,293 அரசு பள்ளிக்கூடங்கள் மூடப்படும் நிலையில் இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் கவலை அளிக்கிறது. பழனிசாமி ஆட்சியில் பள்ளிக்கல்வி துறை சிறப்பாக செயல்படுவது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் அத்துறையின் அடிப்படையே ஆட்டம் கண்டிருக்கிறது என்று சொல்லும்  வகையில் அடுத்தடுத்து வரும் தகவல்கள் இருக்கின்றன.

சில நாட்களுக்கு முன் சட்டப்பேரவையில் வைக்கப்பட்ட அரசின் கொள்கை விளக்க குறிப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பெருமளவு வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில்  4 லட்சத்து 15 ஆயிரத்து 558 பேர் அரசுப்பள்ளிகளைப் புறக்கணித்துள்ளனர். அதேநேரத்தில் கடந்த ஆண்டை விட தனியார் பள்ளிகளில் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் கூடுதலாக சேர்ந்திருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தையும் அரசு வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 1,293 அரசுப்பள்ளிக்கூடங்கள் மூடப்படும் நிலையில் இருப்பதாக அத்துறையின் அமைச்சரே தற்போது கூறியிருப்பது வேதனை தருகிறது. ‘மூடப்படும் பள்ளிகள் நூலகமாக செயல்படும் ’ என்று சொல்வது இதற்கு உரிய தீர்வாக அமையாது. அரசுப்பள்ளிகளின் மீது மக்கள் நம்பிக்கை வைக்கும் அளவுக்கான சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். ஏற்கனவே செய்ததைப்போல அக்கறையோடு இயங்கிய நல்ல அதிகாரிகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு தன்னிச்சையாக செயல்படாமல், ஆர்வமும் திறமையும்மிக்க அதிகாரிகளை முறையாக பயன்படுத்திகொள்ள வேண்டும்.

மேலும் இந்த வீழ்ச்சியில் இருந்து அரசுப் பள்ளிக்கூடங்களை மீட்டெடுப்பதற்காக சமூக அக்கறை கொண்ட கல்வியாளர்கள் குழுவை உடனடியாக அமைத்து, அவர்களின் பரிந்துரையைப் பெற்று அதை அமல்படுத்த வேண்டும். ஏழை, எளிய மாணவச் செல்வங்களுக்கு கல்விக்கண் திறக்கிற வரமாக அமைந்திருக்கும் அரசுப் பள்ளிக்கூடங்களில் ஒன்றைக் கூட மூடக்கூடாது என்று பழனிசாமி அரசை வலியுறுத்துகிறேன்.         

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com