பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் ராஜகோபாலின் உடல்

சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த சரவண பவன் உணவக உரிமையாளர் ராஜகோபாலின் உடல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் ராஜகோபாலின் உடல்


சென்னை: சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த சரவண பவன் உணவக உரிமையாளர் ராஜகோபாலின் உடல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

ஸ்டான்லி மருத்துவமனையில், ராஜகோபாலின் உடல் நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல் நலக் கோளாறு காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பெற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

இந்த நிலையில், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் நீதிமன்றக் காவலில் இருந்த போது மரணம் அடைந்ததாக புழல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அது தொடர்பாக விசாரணை நடத்துவார்கள்.

தனியார் மருத்துவமனையில் ராஜகோபால் உயிரிழந்ததால் அவரது உடல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்படும். பிரேத பரிசோதனைக்குப் பிறகு ராஜகோபால் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். ஏன் என்றால், சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில்தான், ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சரவண பவன் உணவக உரிமையாளர் ராஜகோபால் மரணம்: கொலை வழக்கில் தண்டனை பெற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த ராஜகோபால் இன்று உயிரிழந்தார்.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் உதவியோடு வந்து நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் ராஜகோபால். இதையடுத்து அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு உயர் சிகிச்சை கிடைக்கவில்லை என்று கூறி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்று ராஜகோபாலின் மகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரினார். இதற்கு அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை இடம் மாற்றுவது உட்பட, அவரது மருத்துவ செலவு என அனைத்துக்கும் மகனே பொறுப்பு என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில் காவல்துறை பாதுகாப்புடன் ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார், மர்ம நபர்களால் கொடைக்கானலுக்கு கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வேளச்சேரி போலீஸார் சரவணபவன் உணவக அதிபர் ராஜகோபால் உள்ளிட்ட 11 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.55 லட்சம் அபராதமும் விதித்து கடந்த 2004-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மற்றவர்களுக்கும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து, ராஜகோபால் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

ராஜகோபால் உள்ளிட்டோருக்கு தண்டனையை அதிகரிக்கக் கோரி போலீஸார் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், ஹோட்டல் அதிபர் ராஜகோபால், மேலாளர் டேனியல், கார்மேகம், ஜாகீர் உசேன், காசி விசுவநாதன், பட்டுராஜன் ஆகிய 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், தமிழ்செல்வன், சேது, முருகானந்தம் ஆகிய 3 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், பாலு மற்றும் ஜனர்த்தனன் ஆகியோருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டணையும் விதித்து கடந்த 2009-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. 

இந்தத் தண்டனையை கடந்த மார்ச் மாதம் உறுதி செய்த உச்சநீதிமன்றம், ஜூலை 8-ஆம் தேதிக்குள் ராஜகோபால் உள்ளிட்ட 11 பேரும் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ராஜகோபால் தரப்பில் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்குக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து ராஜகோபால் கடந்த வாரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com