சரவணபவன் ராஜகோபால் காலமானார்

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் உணவக உரிமையாளர் ராஜகோபால், வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.
சரவணபவன் ராஜகோபால் காலமானார்

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் உணவக உரிமையாளர் ராஜகோபால், வியாழக்கிழமை காலை உயிரிழந்தார். உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் மோசமடைந்ததாலும், இதய செயலிழப்பு காரணமாகவும் அவர் இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

பொதுவாக சிறைக் கைதியாக இருக்கும் ஒரு நபர்  தண்டனைக் காலத்தில் உயிரிழந்தால், அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு பின்னரே உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. அந்த வகையில், கொலை வழக்கில் ராஜகோபால் ஆயுள் தண்டனை பெற்று நீதிமன்றக் காவலில் இருந்ததால், அவரது உடலும் பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீதித்துறை நடுவரின் விசாரணைக்குப் பிறகு, அவரது  முன்னிலையில் வெள்ளிக்கிழமை பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து ராஜகோபாலின் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், புன்னை நகருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொலை செய்த வழக்கில் சிக்கிய ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை மாவட்ட நீதிமன்றம் விதித்தது. அதை எதிர்த்து அவரது தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதில் அந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்த்தி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராஜகோபால் மேல் முறையீடு செய்தார்.  அந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், உயர்நீதிமன்றம் அளித்த ஆயுள் சிறையை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. 

இதையடுத்து, ஆம்புலன்ஸ் வாகனத்தில் ராஜகோபால் படுத்த படுக்கையாக வந்து சரணடைந்தார். அவரது உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படுவதாக அறிவுறுத்தினர். இதையடுத்து, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜகோபாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போதே அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் மோசமடைந்ததாகத் தெரிகிறது. குறிப்பாக, சிறுநீரகத் தொற்று தீவிரமாக இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, நீதிமன்றம் வழங்கிய சிறப்பு அனுமதியின் கீழ், ராஜகோபாலின் உறவினர்கள், அவரை தனியார் மருத்துவமனைக்கு கடந்த இருநாள்களுக்கு முன்பு  மாற்றினர். அங்கும் அவருக்கு உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை காலை ராஜகோபாலின் உயிர் பிரிந்தது.

சிறைத் துறை மற்றும் நீதித் துறை நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு, மாலையில் அவரது உடல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட பிறகு உறவினர்களிடம் ராஜகோபாலின் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது. ராஜகோபாலின் மறைவுக்கு உணவகத் துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com