காவல்துறை ஆணையம் விரைவில் அமைக்கப்படும்: முதல்வர் கே.பழனிசாமி

காவல்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற காவல்துறை ஆணையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும்,  அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார
காவல்துறை ஆணையம் விரைவில் அமைக்கப்படும்: முதல்வர் கே.பழனிசாமி

காவல்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற காவல்துறை ஆணையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும்,  அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியது:
குற்றங்கள் குறைவு: கடந்த 8 ஆண்டுகளாகக் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை, குற்றத் தடுப்பு, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை பெற்றுத் தருதல் போன்ற நடவடிக்கைகளினால் மாநிலத்தில் பெரும்பாலான குற்றங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.

தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வன்குற்ற வழக்குகள் 10,844 ஆகும். ஆனால், கேரளத்தில் 13,548-ம், கர்நாடகத்தில் 19,648 -ம்,  குஜராத்தில் 11, 829-ம், ஒடிஸாவில் 19,092 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சொத்துத் தொடர்பான குற்ற வழக்குகள் கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழகத்தில் பதிவானவை 23,650 மட்டுமே.  ஆனால், ஆந்திரத்தில் 25,311-ம், தெலங்கானாவில் 27,949-ம், கர்நாடகத்தில் 37,873-ம், மகாராஷ்டிரத்தில் 94,826-ம், ராஜஸ்தானில் 53,402 வழக்குகளும் பதிவாகி உள்ளன. இந்தப் புள்ளி விவரங்களில் இருந்து மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் குற்றங்கள் மிகக் குறைவாக இருந்து வருவது தெளிவாகிறது. 

கடந்த 8 ஆண்டுகளாக கொலை, சொத்து தொடர்பாக குற்றங்கள் தொடர்பாக பதிவான  ஒரு லட்சத்துக்கு 75 ஆயிரத்து 297 வழக்குகளில் ஒரு லட்சத்துக்கு 23 ஆயிரத்து 499 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது 71 சதவீத குற்ற வழக்குகளில்  குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.  களவுபோன 66.5 சதவீத உடைமைகள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளன.

பெண்கள் பாதுகாப்பு: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பெருமளவில் குறைந்து வருகின்றன.  பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த மெட்ரோ நகரங்களில் சென்னை முதல் நகரமாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக வாகன விபத்துகள் நடப்பதும், விபத்துகளில் உயிரிழப்பதும்கூட குறைந்து வருகின்றன.

கடந்த 2016-ஆம் ஆண்டு 71,431 விபத்து வழக்குகள் தாக்கலாகியுள்ளன. இந்த வழக்குகள் 2017-ஆம் ஆண்டு 65,562-ஆகவும் 2018-ஆம் ஆண்டு 63,920-ஆகவும் குறைந்துள்ளன. 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2018-ஆம் ஆண்டு 10.50 சதவீத விபத்துகள் குறைந்துள்ளன.

காவல்துறை நிதி ஒதுக்கீடு: காவல்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 8 ஆண்டுகளாக அதிகரித்து வழங்கப்பட்டு வருகிறது. 2010-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் காவல்துறைக்கு ரூ.2,962 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ரூ.8,085 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள்: மாநிலம் முழுவதும் கேமராக்கள் பொருத்த தேவையான முக்கிய இடங்களாக ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 390 அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றுள் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 690 கட்டடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  இதில் சென்னையில் 46,865 கட்டடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்: காவல்துறையில் 2019 ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி அனைத்துப் பதவிகளிலும் அனுமதிக்கப்பட்ட இடங்கள்  ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 769 ஆகும். இதில், பணியில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 75 ஆகும். 

காலியாக உள்ளவை 9 ஆயிரத்து 694 இடங்கள் மட்டுமே. இதில் தற்போது 969 ஆய்வாளர்கள் மற்றும் 8,427 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  கடந்த 8 ஆண்டுகளில் காவலர் முதல் காவல்துறை இயக்குநர் வரை பல்வேறு பதவிகளில் 64,500 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

காவல்துறை ஆணையம்: இதையடுத்து, மானியக் கோரிக்கை மீதான வெட்டுத் தீர்மானத்தில் திமுக உறுப்பினர் பொன்முடி பேச அனுமதிக்கப்பட்டார்.

அவர் பேசுகையில், காவல்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற 1969, 1989, 2006 - ஆகிய ஆண்டுகளில் காவல்துறை ஆணையத்தை அமைத்தவர் கருணாநிதி. 4-ஆவது முறையாக காவல்துறை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. ஆணையம் அமைக்கப்படுமா? என்றார் பொன்முடி.

அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்:

காவல்துறை ஆணையம் அமைக்க டிஜிபியிடம் இருந்து கருத்துரு வந்துள்ளது. இதுகுறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் இதுகுறித்த முடிவு எடுத்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com