நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த மசோதா தாக்கல்

நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டங்களைத் தொடர்ந்து செல்லுபடியாக்கும் வகையிலான சட்ட மசோதா பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த மசோதா தாக்கல்

நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டங்களைத் தொடர்ந்து செல்லுபடியாக்கும் வகையிலான சட்ட மசோதா பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மசோதாவை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:  நிலங்களைக் கையகப்படுத்துவதற்காக 1978-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 1997-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 2001-ஆம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.  இந்தச் சட்டங்களைச் செயலற்றதாக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்றமானது கடந்த 3-ஆம் தேதியன்று வழக்கொன்றில் தீர்ப்பு அளித்தது. 

கடும் பாதிப்பு ஏற்படும்: தமிழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் (புதிய நில எடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது)  பல்வேறு திட்டங்களுக்காக 23 ஆயிரத்து 804 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. ஆனால், ஆயிரத்து 373 ஹெக்டேர் நிலம் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. மீதமுள்ள 22 ஆயிரத்து 431 ஹெக்டேர் நிலத்தின் மதிப்பு ரூ.1.84 லட்சம் கோடியாகும். இந்தத் திட்டங்களின் மூலமாக 1.83 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.

ஆனால்,  நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு காரணமாக, கையகப்படுத்தப்பட்ட அல்லது கையகப்படுத்தப்படும் நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படக் கூடும். இதன் பலனாக வளர்ச்சித் திட்டங்களுக்கு தடை ஏற்படுவதுடன், அரசு கருவூலத்துக்கு பெரிய அளவிலான நிதி இழப்பீடு ஏற்படும். இது மாநிலப் பொருளாதாரத்தில் மிக முக்கிய எதிர்விளைவுகள் ஏற்படக் காரணமாகி விடும்.

இந்த அசாதாரண சூழ்நிலையில் தமிழக அரசின் ஏற்கெனவே உள்ள நில எடுப்பு தொடர்பான மூன்று சட்டங்களும் தொடர்ந்து செல்லத்தக்கதாக இருக்கும் வகையில் தனியாகச் சட்டம் இயற்ற அரசு முடிவு செய்துள்ளது. இந்தச் சட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்க வகை செய்திட சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com