நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்

நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் ஆகிய திட்டங்களுக்கு எதிரான தீர்மானங்கள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) நிறைவேற்றப்படவுள்ளன.
நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்


நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் ஆகிய திட்டங்களுக்கு எதிரான தீர்மானங்கள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) நிறைவேற்றப்படவுள்ளன.
புதுவை சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை காலை தொடங்கியது. பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து குறளை வாசித்து பேரவை நடவடிக்கைகளை தொடங்கி வைத்தார். 
மறைந்த புதுவை முன்னாள் முதல்வர் ஆர்.வீ.ஜானகிராமன், முன்னாள் துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா, முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதுவையின் நீர்வளம் பாதுகாப்பு தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அப்போது, சட்டப்பேரவையின் அதிமுக குழுத் தலைவர் ஆ. அன்பழகன் குறுக்கிட்டுப் பேசியதாவது:
சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டியதன் அவசியம் என்ன? புதுவையின் நீர்வளம் பாதுகாப்பது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்வது, தமிழ் மொழி உள்ளிட்ட மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்க மத்திய அரசை கேட்டுக்கொள்வது,  நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோருவது ஆகிய 4 தீர்மானங்கள் கொண்டு வரப்படுகின்றன. இது அவசியமா?
இதைவிட புதுவை மக்களுக்கு அரிசி வழங்காதது, வரி உயர்வு, உள்கட்டமைப்பு வசதிகள் செய்யாதது போன்ற பல பிரச்னைகள் உள்ளன. அதை எடுத்து விவாதித்து தீர்மானம் கொண்டு வந்திருக்கலாம். 
இன்னும் ஒரு வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. இதுபோன்ற நிலையில் அவசரமாக பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவது ஏன் என்று தெரியவில்லை என பேசினார்.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு: அதற்கு அரசுக் கொறடா ஆர்.கே.ஆர். அனந்தராமன் எழுந்து பதிலளிக்கத் தொடங்கினார்.
உடனடியாக அன்பழகன், முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என்றார். அப்போது,  நியமன எம்எல்ஏ வி.சாமிநாதன் குறுக்கிட்டு, தீர்மான நகலை ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு கொடுத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி எழுந்து பதில் கூறத் தொடங்கியதும், அதிமுக குழுத் தலைவர் அன்பழகன் எழுந்து, பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மரியாதை இல்லை. 
ஆளும்கட்சி தமது உறுப்பினர்களைக் கொண்டு மிரட்டுகிறது என்று கூறி தீர்மான நகல்களை கிழித்து எறிந்துவிட்டு வெளியேறினார்.
அதுபோல, என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர் டிபிஆர் செல்வமும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மரியாதை இல்லை என்று கூறி, வெளிநடப்பு செய்தார். அவர்களைத் தொடர்ந்து அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், நியமன உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், மீண்டும் பேரவைக்கு வந்த அவர்கள், இந்தத் தீர்மானம் தொடர்பாக பேசினர். இதையடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார். அத்துடன் பேரவை நடவடிக்கைகள் திங்கள்கிழமை நிறைவுபெற்றன. இந்தக் கூட்டத்தில் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி பங்கேற்கவில்லை.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக இன்று தீர்மானம்: செவ்வாய்க்கிழமை நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com