எம்பிபிஎஸ், பிடிஎஸ் நிர்வாக ஒதுக்கீடு: 4 மாணவர்கள் தகுதி நீக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நிர்வாக இடங்களுக்கு விண்ணப்பித்த நான்கு மாணவர்கள்  தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நிர்வாக இடங்களுக்கு விண்ணப்பித்த நான்கு மாணவர்கள்  தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதாலும், மேல்நிலை வகுப்பில் தகுதியான பாடப் பிரிவுகளை பயிலாததாலும் அவர்களை நீக்கியுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் நடைபெற்றது. அதில், மொத்தமாக  59,756 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அவை பரிசீலனை செய்யப்பட்டு தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 11,741 மாணவர்கள், 19,612 மாணவிகள் என மொத்தம் 31,353 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
அதேபோன்று, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலில் 9,366 மாணவர்கள், 16,285 மாணவிகள் என மொத்தம் 25,651 பேருக்கு தரவரிசைகள் வழங்கப்பட்டிருந்தன.
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில், தரவரிசைப் பட்டியலில் வெளிமாநிலத்தவரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்தது.  இதையடுத்து, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்த 22 மாணவர்களின் பெயர்கள் தரவரிசைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. அவர்களின் பூர்வீகச் சான்றில் குளறுபடி இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் நால்வரது பெயரையும் நீக்கியிருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குநரகத் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. அவர்களில் இருவர் உயிரியல் பாடத்தை மேல்நிலை வகுப்புகளில் பயிலாதவர்கள் என்றும், ஒருவர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மாணவரின் தேர்ச்சி முடிவுகள் வெளியாகாததால் அவரையும் தகுதிநீக்கம் செய்திருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com