எந்திரன் பட பாணியில் சென்னை குடிநீர் வாரியத்தின் டயல் ஃபார் வாட்டர்-2.0! முழு விவரம்

முன்கூட்டியே பணம் செலுத்தினால் மட்டுமே லாரி குடிநீர் பெறும் புதிய முறை, திங்கள்கிழமை (ஜூலை 29) முதல் அமல்படுத்தப்படவுள்ளது. 
எந்திரன் பட பாணியில் சென்னை குடிநீர் வாரியத்தின் டயல் ஃபார் வாட்டர்-2.0! முழு விவரம்


முன்கூட்டியே பணம் செலுத்தினால் மட்டுமே லாரி குடிநீர் பெறும் புதிய முறை, திங்கள்கிழமை (ஜூலை 29) முதல் அமல்படுத்தப்படவுள்ளது. 

சென்னை குடிநீர் வாரியம் தற்போது தினமும் சுமார் 12 ஆயிரம்  நடைகள் வரை லாரிகள் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகித்து வருகிறது.  இதில் 2 ஆயிரத்து 500 நடைகள் டயல் ஃபார் வாட்டர் முறையில் வழங்கப்பட்டு வருகிறது.  இருப்பினும் அதிகளவில் முன்பதிவு செய்யப்படுவதால், குறிப்பிட்ட காலத்துக்குள் குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.  இதை நிவர்த்தி செய்வதற்காக, குடிநீர் லாரிகளின் எண்ணிக்கையை 850 லிருந்து 1,150 வரை அதிகரித்த போதிலும், லாரிகள் மூலம் குடிநீர் பெறுவதற்கு நுகர்வோர் அதிக நாள்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  

இந்தச் சூழ்நிலையைத் தவிர்க்கும் வகையில், நுகர்வோரின் தேவைகேற்ப முன்பதிவு செய்யும்போதே குடிநீர் வழங்கப்படும் தேதி உறுதிசெய்வதற்கு தேவையான மாற்றங்கள் தற்போது நடைமுறையில் உள்ள சேவை முறையில் செய்யப்பட்டுள்ளது. இது வரும் திங்கள்கிழமை (ஜூலை 29) முதல் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.  தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில், குடிநீர் தேவைக்காக முன்பதிவு செய்யும்போது குடிநீர் வழங்கப்படும் தேதி உறுதி செய்யப்படுகிறது.  

இரண்டு நாள்களுக்குள் லாரி குடிநீர்:  உதாரணமா,க ஜூலை 29-ஆம் தேதி அன்று முன்பதிவு செய்யும்போது, குடிநீர் பெற்றுக்கொள்ளும் தேதியை விருப்பத்தின்பேரில் அடுத்த இரண்டு நாள்களில் ஒரு தேதியை (ஜூலை 30 அல்லது ஜூலை 31) தேர்வு செய்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது.  

ஒவ்வொரு பகுதிக்கும் இயக்கப்படும் நடைகளின் எண்ணிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு விநியோகிக்கும் வசதியைப் பொருத்து முன்பதிவுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.  இந்தத் திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு நுகர்வோர்களுக்கு 9 ஆயிரம் லிட்டர்,  12 ஆயிரம் லிட்டர்  மற்றும் 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு லாரிகளும், அடுக்குமாடி அல்லாத குடியிருப்பு நுகர்வோர்களுக்கு 3 ஆயிரம் லிட்டர், 6 ஆயிரம் லிட்டர்,  9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு லாரிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.  பொதுமக்கள் அவரவர் தேவைக்கேற்ப முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவை ரத்து செய்ய முடியாது: இந்தத் திட்டத்தில் இணையதள வழி மூலமாக முன்பதிவு செய்ய இயலாதவர்கள், தொலைபேசி வாயிலாக அழைப்பு மையத்தை (044-4567 4567) தொடர்பு கொண்டு 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளை மட்டும் முன்பதிவு செய்து, தண்ணீர் வழங்கப்படும்போது கட்டணத்தை செலுத்தலாம்.  ஏனைய நுகர்வோர்கள் கட்டணத்தை செலுத்த இணையதள வங்கி,  பற்று அட்டை, கடன் அட்டை இவற்றில் ஏதாவது ஒரு முறையை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த முன்பதிவை ரத்து செய்யும் வசதி இல்லை.  எனவே பொதுமக்கள் தேவைக்கேற்ப மட்டுமே முன்பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஏற்கெனவே பழைய முறையில் பதிவுசெய்தவர்களுக்கு தொடர்ந்து குடிநீர் வழங்கப்படும்.

மேலும் இத்திட்டம் குறித்த தகவல்களை chennaimetrowater. tn.gov.in  என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 

என்ன காரணம்?:  சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை குடிநீர் வாரியத்திடம் லாரி குடிநீர் பெறுவோர் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அதிகளவில் பதிவு செய்து குடிநீரைப் பெறுவதால், சாமானிய மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. 

இதனால்,  நடுத்தர மக்கள் முன்பதிவு செய்து பத்து நாள்கள் கடந்தும் லாரி குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.  இந்தக் காலதாமதத்தின் காரணமாக, தண்ணீர் இருப்பு இருக்கும் போதே மீண்டும் முன்பதிவு செய்யும் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.  இதைக் கருத்தில் கொண்ட குடிநீர் வாரியம், டயல் பார் வாட்டர் திட்டத்தில் திருத்தம் செய்து டயல் ஃபார் வாட்டர்-2.0 என்ற திட்டத்தை அமல்படுத்தவுள்ளது.  இனி முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டும் என்பதால் தேவையற்ற முன்பதிவுகள் குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com