புற்றுநோய் பாதித்த அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு: தமிழக அரசு உத்தரவு

புற்றுநோயால் பாதித்த அரசு ஊழியர்களுக்கு அவர்களின் சிகிச்சைக்கென சிறப்பு விடுப்பு அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


புற்றுநோயால் பாதித்த அரசு ஊழியர்களுக்கு அவர்களின் சிகிச்சைக்கென சிறப்பு விடுப்பு அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சிகிச்சை பெறும் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு முழு ஊதியத்துடன் 10 நாள்கள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும் என்று பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை  செயலாளர் எஸ்.ஸ்வர்ணா உத்தரவு பிறப்பித்துள்ளார். 
இதுகுறித்து, அவர் அண்மையில் வெளியிட்ட உத்தரவு:-
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அரசுப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இப்போது அனுமதிக்கப்பட்ட விடுப்புகளுடன் சிகிச்சை பெறும் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு முழு ஊதியத்துடன் 10 நாள்கள் சிறப்பு விடுப்பு அளிக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், பொது சுகாதாரத் துறை இயக்குநர் அரசுக்கு கடிதம் 
அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில், புற்றுநோய்க்கு மருந்து சிகிச்சை (கீமோதெரபி) எனப்படும் கீமோதெரபிக்கு 10 நாள்கள் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுப்பு நாள்கள் என்பது மருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் தினத்துக்கு முந்தைய தினத்தில் இருந்து தொடங்கி 10 நாள்கள் வரை அனுமதிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், கதிரியக்க சிகிச்சை எனப்படும் ரேடியோதெரபி மேற்கொள்வோருக்கு 10 நாள்கள் விடுப்பு என்பதை மூன்றாகப் பிரித்து அளிக்கலாம். கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும் தினத்துக்கு முந்தைய தினத்தில் இருந்து விடுப்பினைத் தொடங்கி, கதிரியக்க சிகிச்சை பெறும் நாள் மற்றும் அதிலிருந்து (கதிரியக்கம்) மீளப்பெற எட்டு நாள்கள் என மொத்தம் 10 நாள்களைப் பிரித்து வழங்கலாம் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இயக்குநரின் கடிதத்தை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையானது அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதாவது, மருத்துவச் சான்று அடிப்படையில் சிறப்பு விடுப்பினை அனுமதிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
இதனை கவனமுடன் பரிசீலித்த தமிழக அரசு, புற்றுநோய்க்கான மருந்து சிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சை எடுத்துக் கொள்ளும் தினத்துக்கு முந்தைய தினத்தில் இருந்து 10 நாள்கள் வரை சிறப்பு விடுப்பினை வழங்க அனுமதிக்கிறது. எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்களோ அந்த மருத்துவமனையின் பொறுப்பு அதிகாரியிடம் இருந்து உரிய மருத்துவச் சான்றினைப் பெற்று தங்களது துறைத் தலைமையிடம் அரசு ஊழியர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் எஸ்.ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com