தீரன் படம் பார்த்தபோது மனம் திக்கென்றதா? உண்மையான தீரன் இன்று ஓய்வு பெறுகிறார்!

தமிழகத்தில் குலைநடுங்கச் செய்யும் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பவாரியா கொள்ளை கும்பலை ஒழித்த தமிழகக் காவல்துறையின் தீரத்தை விளக்கும் படம் தான் தீரன்.
தீரன் படம் பார்த்தபோது மனம் திக்கென்றதா? உண்மையான தீரன் இன்று ஓய்வு பெறுகிறார்!

சென்னை: தமிழகத்தில் குலைநடுங்கச் செய்யும் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பவாரியா கொள்ளை கும்பலை ஒழித்த தமிழகக் காவல்துறையின் தீரத்தை விளக்கும் படம் தான் 'தீரன் அதிகாரம் ஒன்று'.

நடிகர் கார்த்திக் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, நிச்சயம் பலருக்கும் உள்ளூர ஒரு உதறல் எடுத்திருக்கும். படத்தை பார்த்து முடித்த பிறகு, இப்படியான காவல்துறையினரை நாம் கொண்டிருக்கிறோமே என்று பெருமிதம் ஏற்பட்டிருக்கும்.

அந்த சினிமாவின் பின்னணியில் இருப்பவர் அதாவது உண்மையான தீரன் யார் என்று நிச்சயம் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆம், ஐபிஎஸ் அதிகாரி ஜாங்கிட்தான். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜாங்கிட் (60) இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 

1985ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு பேற்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக பணியில் அமர்த்தப்பட்டு, தற்போது டிஜிபி ரேங்கில் கும்பகோணம், அரசு போக்குவரத்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த ஜாங்கிட் இன்று பணி ஓய்வு பெறுகிறார்.

காவல்துறையில் 35 ஆண்டுகள் பணியாற்றியுள்ள ஜாங்கிட், சிறந்த சேவைக்காக இரண்டு முறை குடியரசுத் தலைவர் பதக்கமும், ஒரு முறை பிரதமர் பதக்கமும், இரண்டு முறை தமிழக முதல்வரின் பதக்கமும் பெற்றுள்ளார்.

இவர் வடக்கு மண்டல ஐஜியாக பணியாற்றிய போது 2001ல் தமிழகத்தில் ஊடுருவி, கும்மிடிப்பூண்டி ஏம்எல்ஏவாக இருந்த சுதர்சன் உள்ளிட்டோரைக் கொலை செய்து கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த உ.பி. மாநிலத்தின் பவாரியா கொள்ளை கும்பலை அவர்கள் இடத்துக்கேச் சென்று ஒழித்துக் கட்டினார்.

அட்டகாசம் செய்து வந்த ரவுடிகளை என்கவுண்டர் செய்தது, தென் மாவட்டங்களில் நிலவி வந்த ஜாதி கலவரத்தைக் கட்டுப்படுத்தியது என அவரது பணிகளை பட்டியலிட்டால் இன்று ஒரு நாள் போதாது.

தமிழகக் காவல்துறையில் இணைந்து பெரும்பணியாற்றிய ஜாங்கிட், எழுத்தாளரும் கூட. இந்திய கலை மற்றும் கலாசாரம், இந்திய பொருளாதாரம் உட்பட 10 புத்தகங்களை எழுதியிருக்கும் ஜாங்கிட், பணி ஓய்வுக்குப் பின் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையங்களைத் துவக்கி பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com