அண்ணாமலை பல்கலைக்கழகத்தை மேம்படுத்த ஒத்துழைக்க வேண்டும்: முன்னாள் மாணவர்களுக்கு துணைவேந்தர் வேண்டுகோள் 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தை மேம்படுத்த, முன்னாள் மாணவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என அதன் துணைவேந்தர் முருகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குருவந்தனம் நிகழ்ச்சியில்   முன்னாள் பேராசிரியர்களுக்கு பாதபூஜை நடத்தும் 1969-ஆம் ஆண்டு பொறியியல் படித்த முன்னாள் மாணவர்கள்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குருவந்தனம் நிகழ்ச்சியில்   முன்னாள் பேராசிரியர்களுக்கு பாதபூஜை நடத்தும் 1969-ஆம் ஆண்டு பொறியியல் படித்த முன்னாள் மாணவர்கள்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தை மேம்படுத்த, முன்னாள் மாணவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என அதன் துணைவேந்தர் முருகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 1969-ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று பல்வேறு துறைகளில் பணியாற்றி,  தொழில்துறையில் சாதித்த முன்னாள் மாணவர்கள் 50 பேர் தங்களது பேராசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் குருவந்தனம் நிகழ்ச்சியை கடந்த 9 ஆண்டுகளாக  நடத்தி வருகின்றனர்.  
இதில் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி தங்களது பழைய நினைவுகளை முன்னாள் மாணவர்கள் பகிர்ந்து வருகின்றனர். 
அதன்படி பத்தாவது ஆண்டு குருவந்தனம் நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணைவேந்தர் முருகேசன் பேசியது:
அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் தங்களது பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி,  மேம்பாட்டுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டும்.  
பல சாதனையாளர்களை உருவாக்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு இறுதியில் 90-ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது. இதையொட்டி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இரண்டு நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுஎன்றார். 
பேராசிரியர்களுக்கு பாத பூஜை: குருவந்தனம் குறித்து முன்னாள் மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், சங்கரன் உள்ளிட்டோர் கூறுகையில்,  ஆசிரியர்களை மாணவர்கள் மதிக்க வேண்டும் என்பது குறித்து இன்றைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.  
எங்களது சங்கம் சார்பில் பல்கலைக்கழகத்துக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் வகுப்பறையை ஏற்படுத்தித் தர முடிவு செய்துள்ளோம் என்றனர்.
முன்னதாக, பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர்கள் பைரவன், கோவிந்தராஜன்,  ரத்தினசபாபதி,  அம்பலவாணன்,  சபாரத்தினம், ஏகாம்பரம்,  குஞ்சிதபாதம் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் பாதபூஜை நடத்தி மரியாதை செலுத்தினர்.  
இந்த நிகழ்ச்சியில், அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளர் கிருஷ்ணமோகன்,  முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் குருசாமி,  அண்ணாமலை,  சத்திய நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com