புதுவை சட்டப்பேரவை நாளை கூடுகிறது: புதிய தலைவர் தேர்வு

புதுவை சட்டப்பேரவைக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்யும் வகையில், பேரவை திங்கள்கிழமை (ஜூன் 3) கூடுகிறது.
புதுவை சட்டப்பேரவை நாளை கூடுகிறது: புதிய தலைவர் தேர்வு

புதுவை சட்டப்பேரவைக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்யும் வகையில், பேரவை திங்கள்கிழமை (ஜூன் 3) கூடுகிறது.
 புதுவை சட்டப்பேரவைத் தலைவராக இருந்த வெ.வைத்திலிங்கம், அந்தப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், தற்போது பேரவை துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, பேரவைத் தலைவர் பொறுப்பைக் கவனித்து வருகிறார்.
 மக்களவைத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், புதிய பேரவைத் தலைவரைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஜூன் 3) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டப் பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் சனிக்கிழமை வெளியிட்டார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 புதுவை சட்டப் பேரவை வரும் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு சட்டப் பேரவை மண்டபத்தில் கூட்டப்படுகிறது. அதே நாளில் பேரவைத் தலைவர் தேர்தலை நடத்தவும் துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். நியமன சீட்டுகளை அளிப்பதற்கான அறிவிப்பு ஒவ்வோர் உறுப்பினருக்கும் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 புதிய பேரவைத் தலைவருக்கான வேட்புமனுவை சனிக்கிழமை அலுவலக நேரத்திலும், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) பகல் 12 மணி வரையிலும் சட்டப் பேரவைச் செயலரிடம் தாக்கல் செய்யலாம். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பேரவைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பட்சத்தில் திங்கள்கிழமை கூடும் சட்டப் பேரவைக் கூட்டத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படுவார்.
 பேரவைத் தலைவர் பதவிக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி தரப்பில் தற்போதைய பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் லட்சுமிநாராயணன், அரசுக் கொறடா அனந்தராமன், சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் எம்.என்.ஆர்.பாலன் ஆகியோர் முயற்சித்து வருகின்றனர்.
 லட்சுமிநாராயணன் ஆளுநருக்கு எதிராக வழக்கு நடத்தும் பணியில் இருப்பதாலும், அனந்தராமன் மீது வழக்குகள் இருப்பதாலும், பாலன் உணர்ச்சிவசப்படுபவராக இருப்பதாலும் பேரவைத் தலைவர் பதவி சிவக்கொழுந்துக்கே கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
 புதுவை பேரவையில் நியமன எம்எல்ஏக்கள் 3 பேரையும் சேர்த்து மொத்தம் 33 பேர் உள்ளனர். இவர்களில் ஆளும் கட்சித் தரப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 15 (வைத்திலிங்கம் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்யாதவரை), திமுகவுக்கு 3, சுயேச்சை 1 என மொத்தம் 19 உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளனர்.
 வைத்திலிங்கம் எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றாலும், இதுவரை எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்யவில்லை. மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான அறிவிப்பு ஆணை வெளியான நாளில் இருந்து 14 நாள்களுக்குள் எம்எல்ஏ பதவியை அவர் ராஜிநாமா செய்ய வேண்டும். அதன்படி, கடந்த மே 25-ஆம் தேதி அவர் வெற்றி பெற்றதற்கான அறிவிப்பு ஆணை வெளியானது. எனவே, வைத்திலிங்கம் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வதற்கான கால அவகாசம் வரும் 8-ஆம் தேதி வரை உள்ளது. இதனால், பேரவைத் தேர்தலில் வைத்திலிங்கமும் வாக்களிக்க முடியும். அதற்கான சூழல் ஏற்பட்டால் அவர் வாக்களிப்பார்.
 அதுபோல, எதிர்க்கட்சி தரப்பில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அதிமுக 4, நியமன எம்எல்ஏக்கள் (பாஜக) 3 என மொத்தம் 14 எம்எல்ஏக்களே உள்ளனர். இதனால், எதிர்க்கட்சித் தரப்பில் பேரவைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதன் காரணமாக, புதிய பேரவைத் தலைவருக்கான வேட்பாளரைத் தேர்வு செய்வதுதான் காங்கிரஸுக்கு சிரமமாக இருக்குமே தவிர, தேர்தலைச் சந்தித்து வெற்றி பெறுவது அந்தக் கட்சிக்கு சுலபமாகவே இருக்கும். எனவே, புதிய பேரவைத் தலைவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com