திண்டுக்கல் அருகே ரூ. 17 லட்சம் மோசடி: கூட்டுறவு கடன் சங்க செயலர் கைது

வடமதுரை அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 17.37 லட்சம் முறைகேடு செய்த கடன் சங்கத்தின் செயலரை வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 


வடமதுரை அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 17.37 லட்சம் முறைகேடு செய்த கடன் சங்கத்தின் செயலரை வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 
திண்டுக்கல் மாவட்டம்,  வடமதுரையை அடுத்துள்ள மணியக்காரன்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில்,  மணியக்காரன்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி உள்ளனர். 
 இந்நிலையில், கடந்த 2017 மற்றும் 2018 -ஆம்  ஆண்டுகளில் சில வாடிக்கையாளர்கள் வட்டியுடன் அசல் தொகையை செலுத்தி நகையை  மீட்டுள்ளனர். ஆனால், வாடிக்கையாளர்கள் செலுத்திய தொகையை வங்கி கணக்கில் வரவு வைக்காமல், முறைகேடு செய்யப்பட்டிருப்பது  கண்டறியப்பட்டது.  இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட பழனி கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் இளமதி, முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்தார். இதையடுத்து, திண்டுக்கல் வணிக குற்றப் புலனாய்வு போலீஸாரிடம் ரூ. 17.37 லட்சம் முறைகேடு நடந்திருப்பதாக அவர் புகார் அளித்தார். 
இதைத் தொடர்ந்து, வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் பி. கவிதா  தலைமையில், சார்பு -ஆய்வாளர்கள் எஸ். சுப்பிரமணி, டி. தண்டபாணி, ஏ. சேகர் பவுல்ராஜ், ஏ. பாலசுப்பிரமணி ஆகியோர் அடங்கிய குழு இந்த மோசடி குறித்து விசாரணை மேற்கொண்டது.  இந்நிலையில்,  முறைகேடு செய்து நிதி இழப்புக்கு காரணமான மணியக்காரன் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலர் முருகன் (54) என்பவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். இதே வழக்கில் தலைமறைவாகியுள்ள சங்கத்தின் எழுத்தர் வாசுகி மற்றும் நகை மதிப்பீட்டாளர் மகாலட்சுமி ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com