
தமிழகத்தில் மருத்துவத் துறையில் காலியாகவுள்ள அமைச்சுப் பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஜாஸ்மின்ஸ் கூட்டமைப்பின் மத்திய செயற்குழு வலியுறுத்தியது.
மருத்துவத் துறை அமைச்சுப்பணியாளர்கள் செயல்திறன் கூட்டு இயக்கத்தின் (ஜாஸ்மின்ஸ்) மத்திய செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் எம்.ஆர்.சிங்காரம் தலைமை வகித்தார்.
மாநிலப் பொதுச் செயலர் ப.இளங்கோவன் வரவேற்றார். கூட்டமைப்பு நிறுவனர் ஆர்.சாய்ராம் சிறப்புரையாற்றினார்.
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு வழங்குவதைப் போல, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை ரொக்கமாக வழங்கிய தமிழக அரசுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. அரசுத் துறையில் பணி நியமனத்தை தடை செய்யும் 1.1.2019-ஆம் தேதி வெளியான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
மருத்துவத் துறையில் நீண்டகாலமாக காலியாக உள்ள, அனைத்து அமைச்சுப் பணியாளர்கள் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். உயர் சிறப்பு அரசு மருத்துவமனைகளில் கூடுதல் அமைச்சுப் பணியாளர் இடங்களை ஏற்படுத்த வேண்டும். அனைத்து அரசுப் பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.