அமராவதி  அணையின்  உள் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவினர்.
அமராவதி  அணையின்  உள் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவினர்.

அமராவதி அணையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவினர் ஆய்வு

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவினர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 


உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவினர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி. மொத்தக் கொள்ளளவு 4,035  மில்லியன் கனஅடி. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மொத்தம் 840 சதுர கி.மீ. பரப்பளவு இதன் நீர்ப்பிடிப்புப் பகுதியாக உள்ளது. 
காவிரியின் துணை நதியான அமராவதி, உற்பத்தி ஆகும் இடத்தில் இருந்து 192 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்து, திருமுக்கூடல் எனும் இடத்தில் காவிரியுடன்  கலக்கிறது. அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் ஆகிய 2 மாவட்டங்களில் உள்ள சுமார் 55,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் அமராவதிஅணை விளங்குகிறது. காவிரி நீர்ப் பங்கீட்டின்போது அமராவதி அணைக்கு வரும் நீரும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவினர் காவிரி நீர் பாயும் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்க நிலை, நீர்வரத்து வெளியேற்றம் ஆகியவை தொடர்பாக காவிரி மேலாண்மை வாரியத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அதன்படி, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவில் இடம் பெற்றுள்ள கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி, கேரள அதிகாரிகள் குழுவினர் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் ஆய்வு மேற்கொள்ள புதன்கிழமை வருகை புரிந்தனர்.
அமராவதி அணைப் பகுதிகள், முக்கிய நீர்ப் பிடிப்புப் பகுதிகளான தேனாறு, பாம்பாறு, சின்னாறு ஆகிய ஆறுகள் இணையும் இடமான கூட்டாறு என்ற ஜீரோ பாயின்ட் இடத்தில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 
அமராவதி அணையின் உள்பகுதி, அமராவதி பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு கால்வாய்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் நடந்து சென்று பல்வேறு ஆய்வுகளை குழுவினர் மேற்கொண்டனர். இதுகுறித்து காவிரி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினர்கள் கூறுகையில், ஜூலை இறுதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்திடம் அறிக்கை சம்ர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்புப் பொறியாளர் மோகன் முரளி, புதுச்சேரி பொதுப் பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் சுரேஷ், கேரள மாநில பாசன உதவி இயக்குநர் சஜ்வீப்குமார், இந்திய வானிலை அறிவியலாளர் அமுதா, அமராவதி அணை செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் சரவணன் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com