ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் பழனிசாமி திடீர் சந்திப்பு

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்.
ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை புதன்கிழமை சந்தித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன்.
ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை புதன்கிழமை சந்தித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன்.


ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர். இந்தச் சந்திப்பு குறித்த விவரங்கள் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் புதன்கிழமை காலை நடைபெற்ற நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்துப் பேசினார். புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்ற சந்திப்பு, சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
தில்லி வருகைக்குப் பிறகு: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த சில தினங்களுக்கு முன்பு தில்லி சென்றார். அங்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புகளை முடித்த ஆளுநர் புரோஹித், புதன்கிழமை சென்னை திரும்பினார்.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை அவர் அழைத்து ஆலோசித்ததாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசிடம் இருந்து குறிப்பிடத்தக்க தகவல்கள் ஏதும் வரப்பெற்றிருந்தால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுக்குத் தெரிவிப்பது ஆளுநரின் கடமையாகும். அந்த வகையில், முதல்வர் பழனிசாமியை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பில் அரசியல் நோக்கங்கள் ஏதுமில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய விஷயங்கள்: ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் ஆளுநர் வசமுள்ளன. மேலும், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தொடங்குவது உள்பட சில முக்கிய விஷயங்கள் குறித்தும் முதல்வருடன் ஆளுநர் புரோஹித் ஆலோசித்ததாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com