கட்டுப்பாட்டை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை: கட்சியினருக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் எச்சரிக்கை

கட்சி விவகாரங்களை உரிய அனுமதியின்றி ஊடகங்களில் தெரிவிக்கும் நபர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக தலைமை எச்சரித்துள்ளது. 
அதிமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி கே.பழனிசாமி, அவைத் தலைவர் இ.மதுசூதனன்,
அதிமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அவைத் தலைவர் இ.மதுசூதனன்,


கட்சி விவகாரங்களை உரிய அனுமதியின்றி ஊடகங்களில் தெரிவிக்கும் நபர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக தலைமை எச்சரித்துள்ளது. 
கட்சித் தலைமை குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வந்த நிலையில், இந்த எச்சரிக்கையை கட்சித் தலைமை விடுத்துள்ளது. 
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என்று கருத்து எழுப்பப்பட்ட நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் பங்கேற்ற கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் பேசினர்.
இரண்டு மணி நேரம் வரை நடந்த இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இணைந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
பத்திரிகைகள், ஊடகங்கள் வழியாகவும், பிற சமூகத் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் கருத்துகளைத் தெரிவிக்கும் பணிக்கென அதிமுக சார்பில் செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்தவொரு விவகாரத்திலும் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதையும், கட்சியின் சிந்தனை ஓட்டம் எத்தகையது என்பதையும் அறிந்து நிர்வாகிகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகே  கருத்துகளைத் தெரிவிக்க உரிமை பெற்றவர்கள்.
ஒழுங்கு நடவடிக்கை: மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்து அடுத்தகட்ட அரசியல் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில், அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்தவொரு ஊடகத்திலும், பத்திரிகையிலும் எத்தகைய கருத்தையும் செய்தித் தொடர்பாளர்கள் தெரிவிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மற்றவர்கள் யாரும் பத்திரிகைகளிலோ, ஊடகங்களிலோ பிற சமூகத் தொடர்பு சாதனங்களிலோ கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது. 
அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சித்திரிக்கக் கூடாது: அதிமுகவின் சார்பிலோ அல்லது கட்சியின் ஆதரவாளர்கள் என்ற பெயரிலோ தனிநபர்களை அழைத்து அதிமுகவின் பிரதிநிதிகளைப் போன்று சித்திரித்து அவர்கள் மூலமாக கருத்துகள் வெளியிடுவதை ஊடகங்கள், பத்திரிகை நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டாம். இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் தவறான செய்திகளைக் கொண்டு சேர்த்து விடும். எனவே, இதனை மனதில் கொண்டு ஊடகங்களும், பத்திரிகை நிறுவனங்களும் இந்த வேண்டுகோளை ஏற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
அதிமுக ஒன்றரைக் கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாகும். ஒழுங்கும் கட்டுப்பாடும் கட்சியின் இரு கண்களாக எப்போதும் இருந்து வந்திருக்கின்றன. இதனை மனதில் கொண்டு அனைவரும் இந்த வேண்டுகோளை ஏற்று ஒத்துழைக்க வேண்டும் என்று தங்களது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும்: கூட்டத்தில் தீர்மானம்
உள்ளாட்சித் தேர்தல் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டுமென அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காலை 10 மணிக்குத் தொடங்கிய கூட்டம் நண்பகல் 12 மணி வரை நடந்தது. 
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள் விவரம்:
மக்களவை பொதுத் தேர்தலிலும், 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் வாக்களித்தவர்களுக்கு நன்றி. அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்த கட்சியினருக்கும், நிர்வாகிகளுக்கும், முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உழைத்த கூட்டணிக் கட்சியினருக்கும் நன்றி.
மக்களவை பொதுத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பாஜக 
மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது. இந்திய தேசத்தின் பிரதமராக நரேந்திர மோடியை வழிமொழியும் வாய்ப்பினை அதிமுகவுக்கு அளித்தமைக்கு நிர்வாகிகள் கூட்டம் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறது.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் சிறப்புடன் பணியாற்றி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பெற்றதைப் போன்று மகத்தான வெற்றியைப் பெறவேண்டும். உள்ளாட்சி மன்றத் தேர்தல் பணிகளை உடனடியாகத் தொடங்கி மக்கள் மனங்களை வென்றெடுக்க வேண்டும்.
அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வகுத்துத் தந்த அரசியல் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும், தமிழக மக்கள் அனைவரும் அனைத்து நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட பணியாற்ற வேண்டும் என கூட்டத்தில் உறுதி ஏற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டுதல் குழு: ஓபிஎஸ் வலியுறுத்தல்
கட்சி விவகாரங்களில் கவனம் செலுத்தவும், கட்சியினரின் நலன்கள் தொடர்பான விஷயங்களைப் பரிசீலிக்கவும் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் ஒவ்வொரு செயலுக்கும் தங்களின் மீதே பழி போடுவதாகவும், கட்சியினரின் நலன்கள் தொடர்பாக பரிசீலிக்க ஏற்கெனவே திட்டமிட்டபடி 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அவைத் தலைவர் இ.மதுசூதனன் பேசும்போது, மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். திறமையானவர்களுக்கே வாய்ப்புத் தர வேண்டும் என்று குறிப்பிட்டார்.


தனிப்பட்ட கருத்துக்குஇடமில்லை 
கட்சியின் நிர்வாகிகள் பேசிய பிறகு, தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலரும், மாவட்டச் செயலாளர்களும் பேச முயன்றனர்.
தேர்தல் தோல்வி தொடர்பாக  கருத்துகளைத் தெரிவிக்க அவர்கள் முயன்றபோது, அதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் அனுமதி தரவில்லை.  
தேர்தல் தொடர்பான விஷயங்கள் அனைத்தும் தெரியும்.  நடந்த விவகாரங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்காமல் இனி எதிர்கால தேர்தல்களை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டும் என இருவரும் அப்போது அறிவுரை வழங்கியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 
இதனால், உட்கட்சிப் பிரச்னைகளை யாரும் எழுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com