கன்னியாகுமரியில் 7 கிராமங்களில் மறு தேர்தல் நடத்தக் கோரிய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 7 கிராமங்களில் மறு தேர்தல் நடத்தக் கோரிய வழக்கில், அந்தக் கிராமங்களில்  நடந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் குறித்த விவரங்களை அறிக்கையாகத்


கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 7 கிராமங்களில் மறு தேர்தல் நடத்தக் கோரிய வழக்கில், அந்தக் கிராமங்களில்  நடந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மீனவர் கூட்டமைப்பின் கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் தாக்கல் செய்த பொது நல மனுவில், கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் கிறிஸ்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, சின்னத்துறை, கடியப்பட்டினம் உள்ளிட்ட ஏழு கிராமங்களில் உள்ள 45 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளன.
பெயர் விடுபட்ட வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் மீன்பிடித் தொழிலாளர்கள். மேலும் ஒக்கி புயலின் போது மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அந்த சமயத்தில் அரசு பாராமுகமாக செயல்பட்டது. எனவே இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்ற அச்சத்தில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டும் இதுவரை எந்த பயனும் இல்லை. எனவே இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். மேலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும். அதேபோல், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்ட ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட ஏழு வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து ஒரே நாளில் இவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. 
கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முகாம்களின் மூலமாக நடத்தப்பட்டுள்ளன. மேலும் வாக்காளர்களுக்குப் போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்ட பின்னரே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார். 
இதனையடுத்து நீதிபதிகள், வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com