தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு: இல்லாத நீருக்கு எங்கே செல்லப் போகிறோம்?

தண்ணீர்.. தண்ணீர்.. இதுதான் அடுத்த உலகப் போருக்கான காரணமாக இருக்கும் என்று முன்பே கணிக்கப்பட்டது.
தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு: இல்லாத நீருக்கு எங்கே செல்லப் போகிறோம்?


சென்னை: தண்ணீர்.. தண்ணீர்.. இதுதான் அடுத்த உலகப் போருக்கான காரணமாக இருக்கும் என்று முன்பே கணிக்கப்பட்டது.

இப்போது தண்ணீர் இல்லாத பகுதிகளில் வாழும் மக்களைக் கேட்டால், இந்த யுகமே தண்ணீர் இல்லாமல்தான் அழியப் போகிறதோ என்று அச்சமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 12,722 மில்லியன் கன அடி ஆகும். தற்போது ஏரிகளில் 5 சதவீத தண்ணீர் மட்டுமே அதாவது 626 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது.  பருவமழை சரியாக பெய்யாததால் அனைத்து ஏரிகளிலும் நீர் இருப்பு குறைந்தளவே இருந்தபோதும்,  தற்போதுள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், வீராணம் திட்டம், நெய்வேலி நீர்ப்படுகையிலிருந்து கூடுதலாக புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், விவசாயக் கிணறுகளை வாடகைக்கு அமர்த்துதல், சிக்கராயபுரம் கல்குவாரிகள் உள்பட பல்வேறு குடிநீர் ஆதாரங்கள் மூலம் தினமும் 52 கோடி லிட்டர் குடிநீர் சென்னை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

சென்னையில் தற்போது தினமும் 900 லாரிகள் மூலமாக 9,400 லாரி நடைகளில் குடிநீர் வழங்கப்படுகிறது. அதில் 6,500 நடைகள் இலவசமாகவும்,  மீதமுள்ள 2,900 நடைகள் தொலைபேசி,  ஆன்லைன் முன்பதிவு மூலமாகவும் வழங்கப்படுகிறது. கால தாமதமின்றி குடிநீர் வழங்கும் வகையில் திறனுக்கேற்ப லாரிகள் நடைகள் தீர்மானிக்கப்பட்டு அதன்படி ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஏற்றவாறு அடுக்குமாடி கட்டடங்கள்,  தனி வீடுகள் என்ற ஒதுக்கீட்டு முறையில் பதிவு செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்படும்.  

இந்த நடைமுறையின் மூலம் நுகர்வோர் பதிவு செய்யும் நாளிலிருந்து அடுத்த இரண்டு நாள்களுக்குள் தேவைப்படும் லாரி தண்ணீரை முன்கூட்டியே பதிவு செய்ய முடியும்.  மேலும் நுகர்வோர் தேர்வு செய்யும் நாளில் காலதாமதமின்றி குடிநீர் வழங்க இயலும்.  நுகர்வோரின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்த சேவைக்காக தற்போது 2 ஆயிரம் லிட்டர்,  3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 200 எண்ணிக்கையில் சிறிய ரக லாரிகள் பயன்படுத்தப்படவுள்ளன என்றனர். 

இது ஒருபக்கம்.. மற்றொரு பக்கம் எப்படி இருக்கிறது?

சென்னையில் தற்போது நிலத்தடி நீர் மட்டம் என்பது கானல் நீராகிவிட்டது. கானல் நீரா.. அது கிடைத்தால் கூட போதும் என்று சொல்லும் அளவுக்கு சென்னைவாசிகளை சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது தண்ணீர் பஞ்சம்.

அடிப்படைத் தேவைகளுக்குக் கூட தண்ணீர் இல்லாமல் தவிப்பது ஒரு பக்கம். மறுபக்கம் அலுவலகங்களும் உணவகங்களும் தண்ணீருக்காக திண்டாடி வருகிறது.

சென்னையின் முக்கியப் பகுதிகளில் இருக்கும் சில உணவகங்கள், உணவு தயாரிக்கப் போதிய தண்ணீர் இல்லாமல் உணவகங்களை மூடிவிட்டன. இன்னும் சில உணவகங்கள், சாப்பாடு, குழம்பு எல்லாம் செய்யாமல், வெறும் கலவை சாதங்களை செய்து ஒப்பேத்தி வருகின்றன.

உணவகங்களை மூடுவதாலும், உணவு தயாரிப்பைக் குறைப்பதாலும் ஏராளமானோர் வேலை வாய்ப்பை இழக்கும் அவலமும் ஏற்படுகிறது.

திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் இருக்கும் மேன்சன்களில் தண்ணீர் இல்லாததால் அறைகளை காலி செய்து வருகிறார்கள் இளைஞர்கள்.

இதற்கிடையே, சென்னையின் முக்கியப் பகுதிகளில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்கள், ஏசியை இயக்கவும், கழிவறைகளில் போதிய தண்ணீர் அளிக்கவும் முடியாமல், பல ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

இப்படி, தண்ணீர் பஞ்சம் சென்னையை சுற்றி வளைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறது. 

எப்போது மழை பெய்யும் என்று மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கும் சென்னைவாசிகள், மழையால் கிடைக்கும் தண்ணீரை எப்படியெல்லாம் சேமிக்கப்போகிறோம் என்று யோசித்து செயல்பட்டால் மட்டுமே பருவ மழை பெய்யும் என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com