சில்லறை வணிகத்துக்கு பாதிப்பு  ஏற்படுத்தும் 24 மணி நேரக் கடை திறப்பு

தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள 24 மணி நேரக் கடைதிறப்பு என்பது பெரிய தொழில் நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், சில்லறை வணிகர்களுக்கு
சில்லறை வணிகத்துக்கு பாதிப்பு  ஏற்படுத்தும் 24 மணி நேரக் கடை திறப்பு

தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள 24 மணி நேரக் கடைதிறப்பு என்பது பெரிய தொழில் நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், சில்லறை வணிகர்களுக்கு சாபகேடாகத்தான் பார்க்கப்படுகிறது.
மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் 24 மணி நேரக் கடை திறப்பு என்பது சாத்தியமாக அமைந்தாலும், பண்பாட்டைக் காப்பதில் முன்னோடி மாநிலமாக உள்ள தமிழகத்தில் இந்த சட்டம் சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. 
பெரும்பாலான வெளிநாடுகளில் பின்பற்றப்படும் கலாசாரம், பண்பாடு என்பது வேறு, தமிழகத்திற்கான பண்பாடு என்பது வேறாகத்தான் பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சட்ட வரைவு 2017 -ஆம் ஆண்டில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அவை பின்னர் கைவிடப்பட்டது. 24 மணி நேரக் கடை திறப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டால் சட்டம் -ஒழுங்கு பிரச்னை என்பது ஒரு புறம் இருந்தாலும், சமூகச் சீரழிவைப் பாதுகாக்க முடியுமா என்பது தான் மற்றொரு பிரச்னையாக கருதப்பட்டது. 
வேலைவாய்ப்பு: சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் போன்ற பெரு நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேரக் கடைதிறப்பு போன்று தான் கடைகள் செயல்பட்டு வருகின்றன. 
இருந்தபோதும் நகரின் மையப்பகுதிகளில் பெரிய அளவிலான மால் 24 மணி நேரம் திறப்பு என்பது இல்லாமல் இருந்தது. இனிமேல் திறப்பதற்கான வழிமுறைகள் இச்சட்டத்தில் உருவாக்கப்பட்டுவிட்டதால் சில்லறை வணிகம்தான் அதிகம் பாதிக்கப்படும். பெரிய தொழில் நிறுவனங்கள், கடைகள் திறப்பதால் நகர்ப்புறத்தில் மட்டுமே வேலை வாய்ப்பு அதிகரிக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கிராமப்புறத்திற்கான வளர்ச்சி என்பது  ஒரு சதவிகிதம் கூட இல்லை. 
பெண்கள் பாதுகாப்பு: இந்த சட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், அவை நடைமுறைப்படுத்த முடியுமா என்பது அனைத்துத் தரப்பினரின் கேள்வியாக உள்ளது. நிறுவனத்துக்குள் அவர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டாலும், வெளியில் பாதுகாப்பு குறைவு ஏற்பட்டால் அவை சட்ட ஒழுங்குக்கு  பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். 
சட்டம், ஒழுங்குப் பிரச்னை: 24 மணி நேரக் கடை திறப்புக்கு அனுமதியளிக்கப்பட்டிருப்பதால், காவல்துறையில் ஆள்களை நியமிக்கும் பணியானது இருமடங்கு அதிகரிக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் 1987- ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட மக்கள் தொகைக்கு நிகராக காவல்துறையில் ஆள்களை நியமிக்க வேண்டும் என்பது இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.  தற்போது தமிழக காவல்துறையில் 1.27 லட்சம் காவலர்கள்  மட்டுமே பணியில்உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் வரை 23,248 இடங்கள் காலியாக உள்ளன.  7.5 கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் 1.27 லட்சம் காவலர்கள் கொண்டு,  சட்ட ஒழுங்குப் பிரச்னையை கையாளுவது என்பது முடியாத காரியம். 
மின் தேவை அதிகரிப்பு: இச்சட்டத்தின்படி பெரிய அளவிலான நிறுவனங்கள், ஹோட்டல்கள் 24 மணி நேரமும்  திறக்கப்பட்டால் அங்கு வழக்கமாகப் பயன்படுத்தும் மின் பயன்பாட்டை காட்டிலும்,  வாடிக்கையாளர்களை கவரும்வகையில் இரவு நேரங்களில் மிளிரக்கூடிய விளக்குகள் பயன்படுத்தப்படும். இதனால் தமிழகத்துக்கான  மின் தேவைகள்  என்பது இரு மடங்கு அதிகரிக்கக்கூடும். ஏற்கெனவே மின் தட்டுபாட்டால் மின்தடை ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் மின் தேவை பூர்த்திச் செய்ய இயலுமா? என்பது மின்வாரியத்தின் கவலையாக உள்ளது. 
சமூகச்சீரழிவு: சென்னை, திருச்சி, கோவை போன்ற தொழில் நகரங்களில், வாரத்தின் கடைசி 3 நாள்கள் சமூகச்சீரழிவை கெடுக்கும் வகையிலான நிகழ்வுகள் வெளியில் தெரியாமல் நடைபெற்று வரும் நிலையில்,  24 மணி நேரம் கடைதிறப்பதினால் சமூகச்சீரழிவுகள் வெளிப்படையாகவே அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்பது பெரிய நிறுவனங்கள், கடைகள் மூலம் அதிகரித்தாலும், தமிழகத்திற்கான கலாசாரம், பண்பாடுகளை காப்பதில் அரசுக்கு முக்கிய பங்கு உள்ளதால் 24 மணி நேர கடை திறப்பு என்பது சாத்தியமாகுமா என்பது அனைத்து தரப்பினரின்  கேள்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com