தளரும் தடை:  தீவிரமாகும் நெகிழி பயன்பாடு!

உள்ளாட்சி அமைப்புகளின் கண்காணிப்பு குறைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் நெகிழி பயன்பாடு மீண்டும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தளரும் தடை:  தீவிரமாகும் நெகிழி பயன்பாடு!

திண்டுக்கல்: உள்ளாட்சி அமைப்புகளின் கண்காணிப்பு குறைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் நெகிழி பயன்பாடு மீண்டும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு மட்டுமின்றி, மனிதர்கள், வன விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள் வரையிலும் நெகிழியால் பாதிப்படைந்து வருவதாக தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு 2019 ஜனவரி முதல் தடை விதிக்கப்பட்டது. இதில் 14 வகையான நெகிழிப் பொருள்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தன.

இதையடுத்து, தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட நெகிழிப் பை உற்பத்தியாளர்கள் 600 பேர், பதிவு செய்யப்படாத 1000-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் நேரடியாக பணியாற்றி வந்த சுமார் 2 லட்சம் பேருக்கான வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, போராட்டங்கள் நடைபெற்றன. ஆனாலும், நெகிழிக்கான தடையை 2 மாதங்களுக்கும் மேலாக தீவிரமாக நடைமுறைப்படுத்திய தமிழக உள்ளாட்சி அமைப்புகள், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 3 மாதங்களாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன. அதன் எதிரொலியாக, நெகிழியின் பயன்பாடு சாலையோர கடைகள் முதல் பல்பொருள் அங்காடிகள் வரை மீண்டும் அதிகரித்துவிட்டது. நெகிழிப் பைகளுக்கான தடையைச் தொடர்ந்து, துணிப் பை மற்றும் காகிதப் பைகளை மீண்டும் கையில் எடுக்க பொதுமக்களும் தங்களை தயார்படுத்தினர். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளின் கண்காணிப்பு குறைந்ததாலும், சில நெகிழிப் பொருள்களுக்கு மட்டும் தடை விதித்துவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும், பல்பொருள் அங்காடிகளில் பருப்பு வகைககள், தானியங்கள் போன்றவற்றை பொட்டலமிடுவதற்கும் நெகிழிக்கு அனுமதி அளித்ததும், தடையை கேள்விக்குறியாக மாற்றிவிட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் தின்பண்டங்கள் "மல்டி லேயர்' பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. நீடிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு என்ற வகையில், இந்த வகை நெகிழிப் பைகளை 30 சதவீதம், 60 சதவீதம் மீண்டும் திரும்ப பெற வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை வழங்கப்பட்டது. ஆனால், அந்த உத்தரவாதத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த எந்த நிறுவனமும் இதுவரை முன் வரவில்லை. அதன் தொடர்ச்சியாக, பாலீத்தின்  பைகளுக்கு மாற்றாக பாலி ப்ரோபிலின் வகை நெகிழிப் பைகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. 

பாதிப்பு மேலும் அதிகரிக்கும்: 50 மைக்ரானுக்கு குறைவான நெகிழிப் பைகளை பயன்படுத்தினால், அவற்றை மீண்டும் உபயோகிக்க முடியாது என கூறப்பட்டது. அதே நேரத்தில் மறு சுழற்சிக்கு பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பைகளில் எத்தனை சதவீதம், பயன்படுத்திய பின் திரும்ப பெறப்படுகிறது என்பதற்கான வரைமுறை இல்லை. இதுபோன்ற சூழலில் 50 மைக்கரானுக்கு கூடுதலான நெகிழி பைகளால் (பாலி ப்ரோபிலின்) சுற்றுச்சூழல் மாசு மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

கடல் உப்பிலும் நெகிழி: இதுதொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியது: நெகிழி பயன்பாட்டிற்கு தடை விதித்தால், உள்ளூர் உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி பன்னாட்டு நிறுவனத்தின் பொருள்களுக்கும் தடை விதிக்க வேண்டும். நீடிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு என்ற வகையில் பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்ட நெகிழிப் பைகளை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், அவ்வாறு சேகரிக்கப்படும் பைகளுக்கு 50 பைசா வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த வாக்குறுதி நடைமுறைக்கு வரவில்லை. நெகிழி மண் வளத்தை மட்டும் பாதிக்கவில்லை. ஆழ் கடல் உயிரினங்களும் நெகிழியால் உயிரிழப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பாக கடல் மீன்களை உண்ணும் போது அவற்றிலுள்ள நுண் நெகிழி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு மேலாக கடல் உப்பிலும் நுண் நெகிழி கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நெகிழி பயன்பாட்டினை கட்டுப்படுத்தாவிட்டால், இனி வரும் நாள்களில் உப்பிலுள்ள நெகிழியின் அளவு மேலும் அதிகரிக்கும் என்றார்.

மனமிருந்தால் மாற்றம் உண்டு: நெகிழிப் பைகளுக்கு மாற்றுப் பொருள்கள் இல்லை என சிலர் கூறி வரும் நிலையில், எதிர்கால சந்ததியினருக்காக சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற மன நிலை அனைத்து தரப்பு மக்களிடமும் இருந்தால் நெகிழியை எளிதாக ஒழிக்க முடியும். 

பாக்கு மட்டை தட்டு, அரச இலை, தாமரை இலை, ஆல இலை, வாழை இலை போன்ற நம் முன்னோர்கள் ஏற்கெனவே பயன்படுத்தியவற்றை நாமும் பின்பற்ற வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கடைக்கு செல்லும் போது துணிப் பைகளையும், பாத்திரங்களையும் எடுத்துச் செல்லும் வழக்கத்துக்கு மாறினால், நெகிழியை நாமே ஒழிக்க முடியும் என கல்லூரி பேராசிரியர் கே.மணிவண்ணன் தெரிவித்தார்.

நெகிழி வகைகள்

பாலித்திலீன் டேராப்தலேட் (டஉபஉ) வகை நெகிழி மூலம் குளிர்பானங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் புட்டிகள், எண்ணெய் பாக்கெட்கள், பழச்சாறு அடைப்பதற்கான புட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. ஹை டென்சிட்டி பாலித்திலீன் (ஏஈடஉ) வகை நெகிழி, பால் புட்டி மற்றும் சலவை சோப்பு, குளியல் சோப்பு, ஷாம்பூ, ப்ளீச்சிங் பவுடர் உள்ளிட்டவற்றை பொட்டலமிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. பாலி வினய்ல் குளோரைடு (டயஇ) வகை நெகிழியில், உணவுப் பதார்த்தங்கள், இனிப்பு மற்றும் பழங்கள் பொட்டலமிடுவதற்கான தட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. 

லோ டென்சிட்டி பாலித்திலீன் (கஈடஉ)  வகை நெகிழியில் ஷாப்பிங் பைகள் மற்றும் சாக்குகள் தயாரிக்கப்படுகின்றன.  பாலி ப்ரோபிலின் (டட) வகை நெகிழியில் பொம்மை, கார் பம்பர் போன்றவையும், பாலீஸ்ட்ரீன் (டந) வகை நெகிழியில் பொம்மை, குளிர்சாதன பெட்டிக்கான ட்ரே, அழகு சாதன பொருள்கள் உள்ளிட்டவையும் தயாரிக்கப்படுகின்றன. இதுவரை அக்ரிலிக், பாலி கார்பனேட், பாலி ஆக்டிக் போன்ற நெகிழி வகைளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com